Saturday, December 10, 2011

ஒரு அகதியின் டயரி - 8 - மீண்டும் ஊருக்கு

வெளிநாட்டுக்கு போறவைக்கு ஏஜென்சிகாரர்தான்  கடவுள்.  காசையும் குடுத்திற்று, வாரவாரம் அவையின்ர ஆபீஸ்க்கு வேற அலைய வேணும். அப்பத்தான் சாமி வரம் குடுக்கிற மாதிரி, எஜின்சி  காரரின்ர மனம் இளகி,  ஒருமாதிரியா  வெளிநாட்டுக்கு அனுப்புவாங்கள். ஆனால் காரனுக்கு எல்லாமே கடகடவெண்டு நடந்தது. காசை கட்டி ஒரு மாதத்தில, பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்து தாய்லாந்துக்கு அனுப்பி வைச்சான்கள்.
நானும் கொழும்புவரைக்கும் வழி அனுப்ப போனன்.

கடைசி நேரத்திலும் எனக்கு  ஏஜென்சி காரனில நம்பிக்கை இல்லை.

 "என்ன மச்சான் லண்டனுக்கு அனுப்பிறன் எண்டுபோட்டு பாங்காக்க்கு அனுப்புறாங்கள். எப்பிடி லண்டனுக்கு அனுப்பபோறங்கள் எண்டு விசாரிச்சனியா ?  " எண்டன்.

 "உதெல்லாம் ஏஜென்சி ரகசியம். கேட்டாலும் சொல்ல மாட்டாங்கள். இப்ப தாய்லாந்துக்கு போறன். கெதியா  எப்பிடி எண்டாலும் லண்டனுக்கு அனுப்புவான் எண்டு நம்பிக்கை இருக்கு. "

வெளிக்கேட  முதல், "மச்சான்,  இந்த நாட்டில மனிசருக்கு மரியாதை இல்லை. ஆயுதங்களுக்குதான் மரியாதை. நீயும் கெதியா வெளியில போற வழியை பார்" எண்டு எனக்கும் வெளிநாட்டு ஆசையை சாடையா கிளறி விட்டிட்டு போனான்.

   திரும்பி காலிக்கு போகேக்க , ஒரே யோசனை. வெளிநாட்டுக்கு போறதை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியேல்ல. என்ர வாழ்க்கையும் காற்று அடிக்க பறக்கிற சருகு போல, நாட்டு பிரச்சினையால அல்லாடினாலும், என்ர நினைப்பு ஊரையே சுற்றி சுற்றி வந்ததாலே வெளிநாட்டை பற்றி யோசிக்கவே முடியேல்ல.
     கொஞ்ச நாளில, JR  இன்ர ஆட்சி போய், பிரேமதாசா ஜனாதிபதியாக  வந்தார். வந்ததும் வராததுமா, தேர்தல் பிரச்சாரத்தில வாக்கு குடுத்தமாதிரி, அமைதிப்படையை ஊருக்கு அனுப்பி வைச்சார். அமைதி படைக்கு பின்னாலேயே தமிழ் தேசிய இராணுவமும் (TNA )  நாட்டை விட்டோட, பழையபடி வடக்கு கிழக்கு புலியளின்ர கட்டுபாட்டில வந்தது.
   அமைதிப்படை போன உடன,  முதல் வேலையா ஊருக்கு டிக்கெட் போட்டன். பஸ் ஏறி ஊருக்கு போகேக்க வவுனியாவை கடந்த உடன ஒரு இனம் புரியாத சந்தோசம். சுதந்திர காற்றை சுவாசிக்கிரமதிரி ஒரு பீலிங். வழி நெடுகிலும் சண்டையின்ர வடு கட்டடங்களில தெரிஞ்சிது. ஊரில எல்லாரும் அமைதி படையின்ர, TNA இன்ற அட்டகாசத்தை கதை கதையா சொன்னாங்கள். நானும் என்ற பங்குக்கு கொழும்பு, காலி பற்றி எல்லாம் புழுகி தள்ளினன்.  கூட்டளியளோட நானும் பருத்தித்துறை, வல்வெட்டி துறை, நாகர்கோவில், கொடிகாமம், சாவகச்சேரி, காரைநகர் கசூர்னா பீச், நைனாதீவு   எண்டு யாழ்ப்பாண பக்கமெல்லாம் சைக்கிள்ள சுதந்திரமா சுத்தி திரின்சன் . கொஞ்ச நாள்ள யாழ்தேவி ரயிலும் ஓட தொடங்கிற்று.  யாழ்ப்பாண சனமெல்லாம் கண்டி, கொழும்பு, நுவரெலிய, கதிகாமம் எண்டு ட்ரிப் போய் வந்திசினம்.
  பேச்சுவார்த்தை எண்டு ஹமீது அடிக்கடி யாழ்ப்பாணம் வந்து போனாலும், ஒண்டும் உருப்படியான தீர்வு வரமாதிரி இல்லை. ஆனா சனம் எதோ
     பிரச்சினை தீர்ந்தமாதிரி, உடைஞ்சு போன வீடு வளவு எல்லாம் திருத்தி, வாழ்க்கையை நம்பிக்கையோட தொடங்கிச்சினம். 
எல்லாம் ஒரு வருசத்துக்குதான்.  மட்டகளப்பில தொடங்கின சண்டை எல்லா இடமும் பரவ, சண்டை, ஷெல் அடி, அகதி எண்டு  பழைய வாழ்க்கை திரும்ப தொடங்கிற்று.