Wednesday, August 20, 2008

நாடகம்

கம்பஸில தமிழ் program ஏதாவது நடந்தா, கட்டாயம் ஒரு நாடகமாவது போடுவாங்கள். நாடகம் நடக்கேக்க பார்க்கிற ஆட்களுக்கு ந‌டுவில‌ இருந்து சில பேர் கத்தி comments அடிப்பாங்கள். நாடகங்களில வாற jokes ஐ விட சிலநேரம் கீழை இருந்து கத்திற‌ comments உம் jokes உம் நல்லா இருக்கும்.
அப்பிடி comments அடிக்கிற ஆட்களில முக்கியமான ஆள் .......குமரன். அவன் பின்வரிசையில இருந்து கத்திறது, முன் வரிசையில இருக்கிற ஆக்களுக்கு மட்டுமில்ல நடிக்கிறவைக்கும் வடிவா கேக்கும். ஒருக்கா, எங்கட batch நாடகம் போடேக்க, குமரனை பின்னால விட்டாதானே பிரச்சினை, அவனுக்கும் சின்னதா ஒரு வேடம் குடுப்பம் எண்டு தீர்மானிச்சு, வந்திற்று போறமாதிரி ஒரு சின்ன role ஒண்டு குடுத்தம். நடிச்சு பழகேக்க எல்லாம் ஒழுங்கா வந்த குமரன், நாடகம் போடுற அண்டைக்கு "Tensionஆ இருக்கு மச்சான் இப்பிடியே நாடகம் நடிக்கேலாது" எண்டு சொல்லிபோட்டு, கடைக்குப்போய் ரெண்டு beer போத்திலை வாங்கி, ஒரு bagகுக்க போட்டுக்கொண்டு வந்திற்றான். என்ன மச்சான் இது எண்டு கேட்டதுக்கு "இதைக்குடிச்சாத்தான் Tension இல்லாம நடிக்காலாம்" எண்டு சொன்னான். இப்ப tension, நாடக தயாரிப்பாளருக்கும் தொத்திற்றுது. குடிச்சுப்போட்டு வந்து நாடகத்துக்கு நடுவில என்ன கூத்து காட்டபோறானோ எண்டு பயம் பிடிச்சிட்டுது. தான் சொன்னா குமரன் கேட்டமாட்டான் எண்டிற்று, நாடக தயாரிப்பாளர் ஒரு final year படிக்கிற சீனியரிட்ட போய், நாடகம் முடியும் மட்டுமாவது குமரனை குடிக்கவேண்டாம் எண்டு சொல்லுங்கோ எண்டு கேட்டான். ஆனா சீனியர், போத்திலையும் கொண்டுவா எண்டு குமரனை மேடைக்கு பின்னால கூட்டிக்கொண்டுபோய், ரெண்டுபேருமா சேர்ந்து ரெண்டு போத்தலையும் குடிச்சு முடிச்சுட்டு வந்திற்றினம். தானும் சேர்ந்து குடித்ததும் இல்லாம, குமரன் ஸ்ரெடியாத்தான் இருக்கிறான் வடிவா நடிப்பான் ஒண்டுக்கும் யோசிக்கா வேண்டாம் எண்டு தயாரிப்பாளருக்கு அட்வைஸ் வேற.


நாடகம் தொடங்கீற்றுது. குமரனுக்கு காவலாளி வேடம். அரசர் சபைக்கு வருகிறார். உடன குமரன் "அரசர் சபைக்கு வருகிறார். பராக் பராக் பராக்" எண்டு வடிவா நாடக வசனத்தை பேசிற்று, ஆடாம அசையாம கையில ஈட்டியோட நிண்டான். கீழ இருந்து விசில் சத்தம் பறக்குது. யாரோ ஒருத்தன் கத்தினான் "குமரா நல்லா நடிக்கிறாய்" எண்டு.
அந்த காட்சி முடிஞ்சு, குமரன் மேடையை விட்டு இறங்கின பிற‌குதான், தயாரிப்பாளருக்கு போன நிம்மதி திரும்பி வந்திது.


வேற ஒருத்தரும் கிடைக்காட்டி, என்னையும் இடைக்கிடை நடிக்க கூப்பிடுவாங்கள். ஒருக்கா இப்படித்தான் நான் ....ராஜனின்ர நாடகத்தில நடிச்சனான். நாடகம் நடந்துகொண்டிருக்கேக்க, ராஜன் நாடக வசனம் எழுதின பேப்பர்களோட மேடைக்கு பக்கத்தில நடிக்கிறவைக்கு மட்டும் தெரியிறமாதிரி நிண்டான். நடிக்கிறவை வசனத்தை மறந்து போச்சினமெண்டா, மெல்லமா சொல்லிகுடுக்க இந்த ஏற்பாடு.
நாடகத்தின்ர உச்சக்கட்டம், கிளைமைக்ஸ் சீன். நான் சிவாஜிகணேசன் மாதிரி, சோகமா நீண்ட வசனம் பேசவேணும். நானும் என்னால முடிஞ்சமட்டும் முகத்த சோகமா வ‌ச்சுக்கொண்டு வ‌ச‌ன‌ம் பேசிக்கொண்டு இருந்த‌ன். ஆனா ராஜ‌ன், "க‌ணேஷ் சோக‌ம், சோச‌ம், சோக‌ம் ப‌த்தாது" எண்டு சொல்லிக்கொண்டேயிருந்தான். இதுக்குமேல‌ சோக‌மெண்டா நான் அழ‌த்தான் வேணும். நானும் கஸ்ரப்பட்டு இன்னும் சோக‌த்தை கூட்ட‌ப்போய் எல்லாம் குழம்பி, இருந்த‌ சோக‌மும் இல்லாம‌ப்போச்சு. ஒருமாதிரி எல்லா வ‌ச‌ன‌த்தையும் சொல்லி முடிச்சிற்ர‌ன். நாட‌க‌ம் முடிய‌ பெடிய‌ள் சொன்னாங்க‌ள். "ந‌ல்லா ந‌டிச்சா ம‌ச்சான், அதுவும் க‌‌டைசி சீன் ப‌கிடியா சூப்ப‌ரா இருந்திது " எண்டாங்க‌ள். அதுக்கு பிற‌கு ராஜ‌ன் என்னை நாட‌க‌ம் ந‌டிக்க‌ கூப்பிடுற‌தேயில்லை.

Friday, July 18, 2008

குறிஞ்சிக்குமரா

கம்பஸுக்கு போன புதிசில அந்தா இருக்கு குறிஞ்சிக் குமரன் கோயில் எண்டு மகாவலி ஆற்றுக்கு அங்கால ரெண்டு மூண்டு மலை தாண்டி தூரத்தில மலை உச்சியில தெரிந்த கோயிலைக் காட்டினாங்கள். இத்தினை மலை தாண்டி, இந்த குளிருக்க கோயிலுக்கு நடந்து போறது எனக்கு சரிப்பட்டு வராது எண்டுதான் முதல்ல நினைச்சனான். ஆனா வெள்ளிக்கிழமை லெக்சருக்கு போறாங்களோ இல்லையோ எல்லாரும் கோயிலுக்கு வெளிக்கிட்டு ஓடிருவாங்கள். அப்பிடி என்ன இந்த கோயில்ல விஷேசம் எண்டு கேட்டதுக்கு "அமைதியா மலையும் மலை சார்ந்த இடத்தில கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு", " காலாற கோயிலுக்கு நடக்கிறதே சுகம்", "தியானமும் பஜனையும் மனதுக்கு இதமா இருக்கும்" எண்டு கனக்க காரணங்கள் சொன்னாங்கள். நானும் கோயிலுக்கு போகத்தொடங்கின பிறகுதான் அட்டை கடிக்க கடிக்க கோயிலுக்கு போறதுக்கான உண்மையான காரணங்கள் என்ன எண்டு விளங்கிச்சு.


அட boys, girls எல்லாருமே ஒன்பது மணி லெக்சருக்கு எட்டு ஐம்பதுக்கு எழும்பி சாடையா தண்ணியை முகத்துக்கு காட்டிபோட்டு, விடிஞ்சும் விடியாமலும் ஓடுற ஆட்கள்தானே. ஆனா கோயிலுக்கு போறது அப்பிடி இல்லையே. விஜயவர்த்தனா, ராமநாதன் லேடிஸ் ஹொல்ரல்ல இருந்து சாறி கட்டி வடிவா வெளிக்கிட்டு கூட்டமா கோயிலுக்கு வருவினம். அத பார்த்தபிறகுதான் மலையும் மலை சார்ந்த இடமும் எப்பிடி கண்ணுக்கு குளிர்ச்சியா மாறுது எண்டு விளங்கிச்சு. விஜயவர்த்தனா ஹால் மட்டும் விறு விறு எண்டு நடக்கிறவன்கள், அதுக்கு பிறகு வேகத்தை குறைச்சு எப்பிடியும் ஒரு மகளீர் அணியுடன் join பண்ணிருவான்கள். அதுக்கு பிறகு காலாற கோயிலுக்கு போறது சுகமாத்தானே இருக்கும். போற வழியிலேயே இப்பிடி எண்டா கோயில்ல எப்படி எண்டு சொல்லத்தேவையில்லை. எல்லாரும் பத்தி பழமா பரவசமா நிற்பாங்கள். எப்பிடி இருந்தாப்போல இவ்வளவு பக்தி வாறது எண்டு விளங்கிறேல்ல. இதை விட Engineering faculty இல instructor ஆ இருக்கிற கொஞ்சபேர் கோயில் மடத்திலேயே தங்கியிருப்பினம். மாலை கட்டவேணும் பஞ்சாமிர்தம் குழைக்க வேணும் எண்டு சொல்லி தங்களுக்கு பிடித்த girlஐ help பண்ண கூட்டிகொண்டு போயிருவினம். ஆராவது பெடியள் ஆசையில தாங்களும் மாலை கட்டபோனா, "போ போய் பூ புடுங்கிக்கொண்டு வா" எண்டு கோயிலுக்கு பின்னுக்கு துரத்திவிட்டிருவாங்கள். நானும் Instructor ஆ இருக்கேக்க, கோயில் மடத்தில இருக்க apply பண்ணி பார்த்தனான். ஆனா என்ர personality அவைக்கு இடைஞ்சல் எண்டோ என்னவோ reject பண்ணிபோட்டாங்கள்.


எனக்கு கோயில்ல பிடித்த இன்னொரு விசயம் மகேஸ்வர பூசை. கோயிலுக்கு போனோண்ண முருகனை கும்பிட முதல் முன்னுக்கு என்னென்ன படைச்சிருக்கு எண்டுதான் பார்ப்பன். வடை, பொங்கல், சுண்டல் எண்டு இருக்கேக்க சிலநேரம் பின்னால முருகன் இருக்கிறது கூட கண்ணுக்கு தெரியாது. ஆனா சிலபேர் அதிலையும் கைவரிசையை காட்டிபோடுவாங்கள். எங்களுக்கு எண்ணி நாலு சுண்டல் தந்து போட்டு, Saree கட்டின ஆக்களுக்கு அள்ளி அள்ளி குடுத்து வெறுப்பேத்துவாங்கள்.
ஒருக்கா யாரோ ஓரு சேவலை கோயிலுக்கு நேர்ந்து குடுத்திற்றினம். சேவலை கண்டவுடன பெடியளுக்கு வாயில எச்சில் ஊற தொடங்கீற்று. எப்ப சேவலை ஏலம் விடப்போறியள் எண்டு கோயில் கொமிற்றியை நச்சரிக்க தொடங்கீற்றினம். நாங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து என்ன விலை குடுத்தாவது சேவலை வாங்கிறது எண்டு தீர்மானிச்சம். எங்கள மாதிரி கனபேர் சேவலுக்கு போட்டி போட்டதால unofficialஆ அதின்ர விலை எக்கசக்கமா ஏறிப்போச்சு. ஆனா கடைசிமட்டும் அதை ஏலத்துக்கு விடவேயில்லை. பிறகு எங்க கொஞ்ச நாளா சேவலைக் காணேல்ல எண்டு கேட்டா "அதைக் காணேல்ல களவு போயிற்றிது " எண்டாங்கள். சேவலுக்கு என்ன நடந்தது எண்டு அந்த குறிஞ்சி குமரனுக்குதான் வெளிச்சம்.

Friday, July 11, 2008

Hair Cut

தலைமயிர் வெட்டுறது எண்டா எனக்கு சின்னனில இருந்தே ஒரு பயம். சின்னனில barber வீட்ட வந்து பின்வளவுக்க இருக்கிற பூவரச மரத்துக்கு கீழ ஒரு கதிரைஐ போட்டு அங்க வைச்சுத்தான் தலைமயிர் வெட்டுவார். barberஐ கண்டவுடனேயே பயத்தில கத்த தொடங்கீருவன். அப்பாவும் மாமாவும் நான் கத்த கத்த தூக்கிக்கொண்டுபோய் கதிரையில இருத்துவினம். barberரும் சும்மா வெட்டதொடங்க மாட்டார். சவரக்கத்திஐ எடுத்து ஒரு தோல்பட்டியில தீட்டி, சும்மாவே கத்திக்கொண்டு இருந்த என்னை வீல் வீல் எண்டு கத்தவைப்பார். barber கத்தி தீட்டுறதையும், அப்பாவும் மாமாவும் அமத்தி பிடிக்கிறதையும் நான் இருக்கிற விதத்தையும் பார்த்தா, கிடாய் ஆடு அறுக்கிறதுதான் ஞாபகத்திற்கு வரும். பிறகு பெரிசா வளர்ந்த பிறகும், இது என்ன சடை எண்டு எல்லாரும் ஏசும் மட்டும் சலூன் பக்கம் போறதில்லை. போனாலும் அப்படி வெட்டுங்கோ, இப்படி வெட்டுங்கோ எண்டு கண்டிஷன் ஒண்டும் போடுறதில்லை. கையில கத்தியோட சுத்தி சுத்தி வாற ஆளிட்ட எப்படி கண்டிஷன் போடுறது. barber கழுத்தை சுற்றி துணியை இறுக்கி கட்டிபோட்டு எப்படி வெட்டுறது என்று பார்வையாலே கேள்வி கேட்பார். நானும் shortஆ வெட்டுங்கோ எண்டு சொல்லிப்போட்டு சிவனே எண்டு இருந்திருவன். அவரும் தலையை அந்தபக்கம் இந்தபக்கம் இழுத்து, பிடரியில நாலு அடி அடித்து, ஒருமாதிரியா மயிரை வெட்டி முடிச்சு, பவுடர் அடிக்கும் வரைக்கும் ஒரு சொல்லும் கதைக்கமாட்டன்.

அது இந்தியன் ஆமியும் ஈபிடிபி ஒண்டா திரிந்த காலம். கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி வளைச்சு பெடியளை பிடிக்கிற நேரம். நான் சந்தியில தலைமயிர் வெட்டிக்கொண்டு இருந்தனான். தலைமயிர் வெட்டிற barber அன்ரனுக்கு என்னை விட ரெண்டு வயதுதான் கூட இருக்கும். எங்கட கஸ்ரகாலம், இந்தியன் ஆமியும் ஈபிடிபியும் வந்து, சந்தியை சுத்தி வளைச்சு, ஒவ்வொரு கடை கடையா போய், நிண்ட எல்லா பெடியளையும் நடுசந்தியில இருக்க வைச்சினம். சலூனுக்கையும் ஒரு சீக்கியன் வந்தான். "barber salon.. OK carry ON" எண்டு சொல்லிபோட்டு கண்ணாடியை பார்த்து மீசையை முறுக்கிப்போட்டு திரும்பி போயிற்றான். இப்ப எனக்கும் அன்ரனுக்கும் என்ன செய்யுறது வெளியில போய் எல்லாரோடும் இருக்கிறதா அல்லது தொடர்ந்து வெட்டுறதா எண்டு குழப்பம். கடைசியில ஆமிக்காறனே சொல்லிபோட்டான், தொடர்ந்து வெட்டுவம் எண்டு தீர்மானிச்சு, சலூனூக்கையே ரெண்டு பேரும் இருந்திற்றம். கொஞ்ச நேரத்தில ஒரு ஈபிக்காரன் கத்திக்கொண்டு உள்ள வந்தான். துவக்கின்ர பின்பக்கத்தை திருப்பி ஒரு ஓங்கி அடிச்சான். ஆனா நான் ராஜீவ்காந்தி தப்பினமாதிரி குனிஞ்சு தப்பி வெளியால ஓடி, கூட்டத்தோட கூட்டமா நடுசந்தியில போய் இருந்திற்றன். ஆனா பாவம் அன்ரன்தான் என்ர அடியையும் சேர்த்து வாங்கீற்றார். பிறகு தலையாட்டி வந்து, செக்பண்ணி முடிஞ்சு வீட்ட போய்ச்சேர இரவாகீற்றுது. அம்மா கேட்டா, இது என்ன புது ஸ்ரைல பின்னால துணி கட்டியிருக்கிறாய் எண்டு. அப்பதான் பார்த்தன், சலூனில அன்ரன் கழுத்தில கட்டின துணி இன்னும் அவுக்கவே இல்லை.

அப்பிடி ஆமிகாரனிட்டயே தப்பிவந்த நான், ஒருநாள் குடும்ப சண்டைக்கு நடுவில நல்லா மாட்டுபட்டு போனன். கம்பஸில படிக்கேக்க ஹொஸ்ரலுக்கு பின்னால இருக்கிற பெட்டிக்கடையிலதான் வழமையா தலைமயிர் வெட்டுறனான். பத்து ரூபா காசுக்கு சுமாரா வெட்டிபோடலாம். பெட்டிகடையோட இருந்த கொட்டிலிலதான் barber இன்ர குடும்பமும் இருந்தது. அண்டைக்கு நானும் ஜெனுவும் தலைமயிர் வெட்ட போயிருந்தம். கழுத்தில துணி கட்டி எனக்கு barber தலைமயிர் வெட்டதொடங்கீற்றார். முதல்ல உள்ளுக்குள்ள இருந்து புறுபுறுத்துக்கொண்டிருந்த barber இன்ர மனுசி, கொஞ்சம் கொஞ்சமா சத்தத்தை கூட்டி உச்சதொனியில barberஐ ஏசத்தொடங்கீற்றா. முதல்ல சும்மா இருந்த barberரும் இப்ப இடைகிடை திருப்பி ஏசதொடங்கீற்ரார். ஆனா, வெட்டுறத நிப்பாட்டவேல்லை. barberருக்கு கோபம் கூட கூட வெட்டிற வேகமும் கூடிக்கொண்டு போச்சு. ஒரு கட்டத்தில, barber இண்ட கண் மனுசி நிண்ட பக்கம் பார்க்கிது, வாய் தாறுமாறா ஏசுது. கையில இருந்த கத்திரிக்கோல என்ர தலையில பூந்து விளையாடுது. என்னடா இப்பிடி வந்து மாட்டுபட்டுட்டன். வெட்டுறத நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லவும் பயமாகிடந்தது. மனுசியில இருக்கிற ஆத்திரத்தில என்னில பாய்ந்தால் என்ன் செய்யிறது. கையில வேற கத்தரிக்கோல். ஏதோ நடக்கிறது நடக்கட்டும் எண்டு பேசாம இருந்திற்றன். இப்ப barber கோபமா உள்ளுக்க போனார். தடால் தடால் எண்டு சட்டி பானைச்சத்தம், அடி வாங்கினாரோ போட்டாரோ தெரியேல்ல, வரேக்க கொஞ்சம் கோபம் குறைந்திருந்தது, வந்து என்ர தலையில மீண்டும் வேலையை தொடங்கிற்றார். ஆனா மனுசி விடுறதா இல்லை, கத்திக்கொண்டு சலூனுக்கையே வந்திற்றா. இனியும் இருந்தா என்ர தலை தப்பாது. Barber கொஞ்சம் அசந்த நேரம் பாத்து, சடாரெண்டு குதித்து, துணியை அவிட்டு போட்டு, பத்து ரூபா தாளை நீட்டி thank you சொல்லீற்று, இவ்வளவு நேரமும் ஆ எண்டு விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்த ஜெனுவையும் இழுத்துக்கொண்டு வெளியில வந்திற்றன்.

முன் பக்கம் தலையை தடவி பார்த்திற்று ஜெனுவிட்ட "என்ன மச்சான் இப்படி கோதி போட்டான்" எண்டன். அதுக்கு ஜெனு "முன்பக்கத்தை நினைச்சு கவலைபடாதை மச்சான் எனெண்டா பின்பக்கம் அதவிட மோசம்".எண்டான். பிறகு bus ஏறி கண்டிக்கு போய், இன்னொரு சலூனில தலையை shape பண்ணிற்று வந்தம். ஒரே நாள்ல ரெண்டு சலூனில ரெண்டு தரம் தலைமயிர் வெட்டின ஒரே ஆள் நானாத்தான் இருப்பன்.

Sunday, June 22, 2008

இப்படியும் ஒரு ராகிங்

அப்ப கம்பஸுக்கு போன புதுசு. ராகிங் முடியேல்ல எண்டாலும் ராகிங் வாங்கி வாங்கிப் பழகிப்போன காலம். பெரிசா சீனியர்மாருக்கு பயமும் இருக்கேல்ல. சீனியர்மாரை எப்பிடி சுத்துறது எண்டு ஒரளவுக்கு தெரிந்திருந்த நேரம். சில பேருக்கு பயந்தமாதிரி நடிக்க வேணும். சிலபேருக்கு தலையை ஆட்டிகொண்டிருந்தா போதும். சிலபேர் கெட்ட வார்த்தையால திட்டுவான்கள் கேட்டுகொண்டு இருக்கவேணும். ஆக ஒண்டு ரெண்டு பேர்தான் றூமுக்கு கூட்டிகொண்டுபோய் முறிச்சுபோட்டு அனுப்புவாங்கள்.
ராகிங் முடியும் மட்டும் தலைமயிரை ஒட்ட வெட்டவேணும். Bata செருப்புதான் போடவேணும். மீசை தாடி இருக்க கூடாது எண்டு கனக்க ரூள்ஸும் இருந்தது. கத்தரி கண்ணாடி எண்டொரு சீனியர். எப்ப பார்த்தாலும் கத்தரிகோலோடதான் திரிவான். தலைமயிர் கொஞ்சம் பெரிசா வளர்ந்திருந்தாலும் தாறுமாறா வெட்டிபோடுவான். அவனுக்கு பயத்திலேயே எல்லாரும் சலூனுக்கு போய் ஒட்ட வெட்டுவம். இன்னொரு சீனியரின் றூமுக்கு பட்டப் பெயரே சலூன்தான். அங்க போனா கட்டாயம் மொட்டை தட்டிபோட்டுதான் விடுவாங்கள்.
சரி கதைக்கு வருவம். ஒரு நாள் நாங்கள் எல்லாரும் இங்க்லிஸ் கிளாசில இருக்கிறம். எல்லாரையும் உடனடியா அசெம்பிளி ஹாலுக்கு வரும்படி துணைவேந்தர் அழைத்திருந்தார். நாங்களும் எங்கட இங்கிலிஸ் ரிச்சர்மாரும் அசெம்பிளி ஹாலுக்கு போய் இருந்தம். கொஞ்ச நேரத்தில துணைவேந்தர் வந்து, சிங்களத்தில தாறுமாறா ஏச தொடங்கிற்றார். ஒரு பத்து பதினைந்து நிமிடமா ஒரே ஏச்சு. எனக்கு ஒரு சொல்லு கூட விளங்கேல்ல. எனக்கு மட்டுமில்லை அங்க இருந்த எழுபது எழுபத்தைந்து தமிழ் ஆக்களுக்கும் அவர் என்னத்துக்கு இந்த கத்து கத்திறார் எண்டு ஒண்டுமே விளங்கேல்ல. மேல நிண்டு ஏசிக்கொண்டு நிண்டவர் கீழ இறங்கிவந்து முன்வரிசையில இருந்த குகரூபனை பாத்து " Go to the stage" எண்டு கத்தினார். பின்னால வந்து வாகீஐயும் மேல அனுப்பினார். வாகீக்கு பக்கத்தில இருந்த ரூபன் பயத்தில சொல்லாமலே எழும்பி போயிற்றான். அப்பிடியே பின்னால போனவர் இன்னும் கொஞ்சபேர stageக்கு மேல அனுப்பிப்போட்டு முன்னுக்கு வந்து மேல நிக்கிற ஆக்களை காட்டி இன்னும் பலமா சத்தம் போட தொடங்கீற்றார். அப்பவும் எனக்கு விளங்கேல்ல இந்த மனுசனுக்கு ஏன் இந்த கோபம் எண்டு.
திரும்பி மேல நிக்கிற ஆக்களை பார்த்து ஏதோ சிங்களத்தில கேட்டார். குகரூபன்தான் கொஞ்சம் தைரியமா "I don't know Sinhala" எண்டு சொன்னான். "OK what is the proper dress to come to lectures" எண்டு இங்கிலிசில கேட்டார். சேர்ட், ட்ரவுசர் எண்டு மேல நிண்டவன்கள் சொன்னான்கள். கொஞ்சநேரத்திற்கு வேற பதில் இல்லை. What else எண்டு மீண்டும் கத்தினார். மேல நிண்ட ஒருத்தன் Pen எண்டு சொன்னான். Pen ? OK What else எண்டு வெருட்டினார். அப்ப குகரூபன் Shoes எண்டு சொன்னான். உடன திரும்பி குகரூபனிட்ட where is your shoes எண்டு கத்தினார். இப்பதான் எல்லாருக்கும் விளங்கீச்சு shoe போடாத்தற்குத்தான் இவ்வளவு நேரமும் சத்தம் போட்டவர் எண்டு. இன்னும் கொஞ்சநேரம் சிங்களத்திலயும் இங்கிலிசிலையும் மாறி மாறி திட்டிப்போட்டு எனக்கு இப்ப ஏன் shoe போடவில்லை எண்டு தெரியவேணும் எண்டு சொல்லி மேலும் கத்தினார். குகரூபன் "எனக்கு shoe கட்டாயம் போட வேணும் எண்டு தெரியாது. இனி போட்டுக்கொண்டு வாறன்" எண்டான். ஆனா அந்தாள் இருந்த ஆத்திரத்தில குகரூபனை வெளியில துரத்திவிட்டுட்டார். பிறகு இங்கிலிஸ் ரீச்சர்மார் தலையிட்டு துணைவேந்தர சமாதானபடுத்தி அவற்ற ராகிங்கை முடியுக்கு கொண்டுவந்தினம்.
இரவு றூமுக்கு போய் எல்லாரும் shoe க்கு polish போட்டு அடுத்தநாள் லெக்சருக்கு போக ரெடி பண்ணினம். துணைவேந்தரே சொல்லிபோட்டார். இனி என்ன. சீனியர்மாருக்கு முகத்தில கரி பூசின மாதிரிதான் என்ற சந்தோசம் வேற. நானும் கொழும்புக்கு வந்து வங்கின புது branded shoeஐ எடுத்து வைத்தன். ஆசை ஆசையா வாங்கின shoe. ஆனா ராகிங்கால போட சந்தர்ப்பம்தான் கிடைக்கெல்ல. அடுத்தநாள் எல்லாரும் வலு ஸ்ரைலா வெளிக்கிட்டு போனம். ஆனா ஹால் வாசலில நாலு வாளி நிறைய தண்ணி இருந்தது. பக்கதில நிண்ட சீனியர் " எங்களுக்கும் நீங்க shoe போடுறது சந்தோசம்தான் ஆனா shoeவையும் காலையும் வடிவா கழுவிபோட்டு போங்கோ" எண்டார். பிறகென்ன, ரெண்டு காலையும் shoe ஒட தண்ணி வாளிக்க வைச்சுபோட்டு சதக் சதக் எண்டு நடந்து லெக்ஸருக்கு போனதுதான்.

Thursday, June 19, 2008

முதல் தாக்குதல்

அப்ப நாங்கள் நாலாம் வகுப்பு படிச்சுக்க்கொண்டு இருந்தனாங்கள் எண்டு நினைக்கிறன். பள்ளிகூடத்துக்கு நாங்கள் நடந்துதான் போறனாங்கள். வீட்டில இருந்து பள்ளிகூடம் கிட்டதட்ட ரெண்டு கிலோமீற்ற்ர் தூரம் இருக்கும். நான், சண்முகமணி, நிமலன், சிவானந்தன், சுதா, எண்டு கனபேர் ஒண்டா போறதால களைப்பு இல்லாம போய்வருவம். பள்ளிகூடம் விட்டு வரேக்க, நொத்தார் விட்டு மாமரத்தில மாங்காய் புடுங்கிறது, தந்தி கம்பிக்கு கல் எறியிறது, வெள்ளத்தில் வெடி அடிக்கிறது எண்டு நேரம் போறதே தெரியாது. ஒரு மணிக்கு பள்ளிகூடம் விட்டா ஒரு நாலு நாலரைக்கு வீடு வந்து சேருவம். நொத்தாருக்கு நல்ல மனசு. கிளி கொத்தின மாங்காய், கீழ விழுந்த மாங்காய் எல்லாம் எடுத்து வடிவா வெட்டி தருவார். எண்டாலும் எங்களுக்கு கள்ள மாங்காய் புடுங்கிறதில ஒரு சந்தோசம். மாமரத்துக்கு கல் எறிந்து விழுகிற மாங்காய்களை பொறுக்கிக்கொண்டு ஓடுவம்.
ஓருநாள் எல்லாரும் பள்ளிகூடம் விட்டு வந்துகொண்டு இருக்கேக்க, தூரத்தில ஒரு பொலிஸ் ஜீப் ஒண்டு எங்களை நோக்கி வந்துகொண்டுருந்தது. சிவானந்தன் என்ன நினைத்தானோ தெரியாது ஒரு கல்லை எடுத்து பொலிஸ் ஜீப்புக்கு எறிந்து போட்டான். கல் ஜீப் Bபோனற்றில டொங் எண்டு பெரிய சத்தத்தோட விழுந்தது. பொலிஸ் ஜீப் போன வேகத்தில ரிவேசில வந்தது. என்னையும் நிமலனையும் விட மற்ற எல்லாரும் வயலுக்கிளால விழுந்தடித்து ஓடிற்றாங்கள். எனக்கு பயத்தில வயித்த கலக்கிச்சு. ஆனா பொலிஸ் எங்க ரெண்டு போரையும் விட்டிட்டு, ஒழுங்கைக்கிளால ஜீப்பை திருப்பி ஓடின எல்லாரையும் மடக்கி பிடிச்சி ஜீப்பில ஏத்திக கொண்டு போயிற்றினம். நானும் நிமலனும் சந்திக்கு அழுதுகொண்டு ஓடினம். அங்க சிவானந்தனின் பெரியப்பா சயிக்கிள் கடை வச்சிருக்கிறார். அவரிட்ட சொல்லுவம் எண்டுதான் ஓடினாங்கள். ஆனா அங்க எங்களுக்கு முதலே மற்ற எல்லாரும் சயிக்கிள் கடையில நிக்கிறாங்கள். சிவானந்தன் மட்டும் அழுதுகொண்டு நிக்கிறான்.
என்ன நடந்து எண்டா, பொலிஸ் எல்லாரையும் பிடிச்சு நல்லா வெருட்டி போட்டு, ஊர் எது, அப்பா பெயர் என்ன எண்டு விசாரிச்சிரிக்கீனம். சிவானந்தன்ர பெரியப்பா சந்தியில கடை வச்சிருக்கிறதால அவரிட்ட சொல்லுறதுக்கு எல்லாரையும் சந்திக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கீனம். நடந்தத கேட்ட பெரியப்பா சிவானந்தனுக்கு நாலு போடு போட்டிருக்கிறார். மற்ற எல்லாரும் பொலிஸ் ஜீப்பில ரிப் அடித்த சந்தோசத்தில சிரிச்சுக்கொண்டு நிக்கிறாங்கள்.
நிலமையை பார்த்தீங்களா? சும்மா நிண்ட நானும் நிமலனும் கால் கடுக்க ஓடி போறம். கல் எறிந்தவனுக்கும் அவனோட சேர்ந்து ஓடினவங்களுக்கும் ஓசி பொலிஸ் ரிப்.