Sunday, June 22, 2008

இப்படியும் ஒரு ராகிங்

அப்ப கம்பஸுக்கு போன புதுசு. ராகிங் முடியேல்ல எண்டாலும் ராகிங் வாங்கி வாங்கிப் பழகிப்போன காலம். பெரிசா சீனியர்மாருக்கு பயமும் இருக்கேல்ல. சீனியர்மாரை எப்பிடி சுத்துறது எண்டு ஒரளவுக்கு தெரிந்திருந்த நேரம். சில பேருக்கு பயந்தமாதிரி நடிக்க வேணும். சிலபேருக்கு தலையை ஆட்டிகொண்டிருந்தா போதும். சிலபேர் கெட்ட வார்த்தையால திட்டுவான்கள் கேட்டுகொண்டு இருக்கவேணும். ஆக ஒண்டு ரெண்டு பேர்தான் றூமுக்கு கூட்டிகொண்டுபோய் முறிச்சுபோட்டு அனுப்புவாங்கள்.
ராகிங் முடியும் மட்டும் தலைமயிரை ஒட்ட வெட்டவேணும். Bata செருப்புதான் போடவேணும். மீசை தாடி இருக்க கூடாது எண்டு கனக்க ரூள்ஸும் இருந்தது. கத்தரி கண்ணாடி எண்டொரு சீனியர். எப்ப பார்த்தாலும் கத்தரிகோலோடதான் திரிவான். தலைமயிர் கொஞ்சம் பெரிசா வளர்ந்திருந்தாலும் தாறுமாறா வெட்டிபோடுவான். அவனுக்கு பயத்திலேயே எல்லாரும் சலூனுக்கு போய் ஒட்ட வெட்டுவம். இன்னொரு சீனியரின் றூமுக்கு பட்டப் பெயரே சலூன்தான். அங்க போனா கட்டாயம் மொட்டை தட்டிபோட்டுதான் விடுவாங்கள்.
சரி கதைக்கு வருவம். ஒரு நாள் நாங்கள் எல்லாரும் இங்க்லிஸ் கிளாசில இருக்கிறம். எல்லாரையும் உடனடியா அசெம்பிளி ஹாலுக்கு வரும்படி துணைவேந்தர் அழைத்திருந்தார். நாங்களும் எங்கட இங்கிலிஸ் ரிச்சர்மாரும் அசெம்பிளி ஹாலுக்கு போய் இருந்தம். கொஞ்ச நேரத்தில துணைவேந்தர் வந்து, சிங்களத்தில தாறுமாறா ஏச தொடங்கிற்றார். ஒரு பத்து பதினைந்து நிமிடமா ஒரே ஏச்சு. எனக்கு ஒரு சொல்லு கூட விளங்கேல்ல. எனக்கு மட்டுமில்லை அங்க இருந்த எழுபது எழுபத்தைந்து தமிழ் ஆக்களுக்கும் அவர் என்னத்துக்கு இந்த கத்து கத்திறார் எண்டு ஒண்டுமே விளங்கேல்ல. மேல நிண்டு ஏசிக்கொண்டு நிண்டவர் கீழ இறங்கிவந்து முன்வரிசையில இருந்த குகரூபனை பாத்து " Go to the stage" எண்டு கத்தினார். பின்னால வந்து வாகீஐயும் மேல அனுப்பினார். வாகீக்கு பக்கத்தில இருந்த ரூபன் பயத்தில சொல்லாமலே எழும்பி போயிற்றான். அப்பிடியே பின்னால போனவர் இன்னும் கொஞ்சபேர stageக்கு மேல அனுப்பிப்போட்டு முன்னுக்கு வந்து மேல நிக்கிற ஆக்களை காட்டி இன்னும் பலமா சத்தம் போட தொடங்கீற்றார். அப்பவும் எனக்கு விளங்கேல்ல இந்த மனுசனுக்கு ஏன் இந்த கோபம் எண்டு.
திரும்பி மேல நிக்கிற ஆக்களை பார்த்து ஏதோ சிங்களத்தில கேட்டார். குகரூபன்தான் கொஞ்சம் தைரியமா "I don't know Sinhala" எண்டு சொன்னான். "OK what is the proper dress to come to lectures" எண்டு இங்கிலிசில கேட்டார். சேர்ட், ட்ரவுசர் எண்டு மேல நிண்டவன்கள் சொன்னான்கள். கொஞ்சநேரத்திற்கு வேற பதில் இல்லை. What else எண்டு மீண்டும் கத்தினார். மேல நிண்ட ஒருத்தன் Pen எண்டு சொன்னான். Pen ? OK What else எண்டு வெருட்டினார். அப்ப குகரூபன் Shoes எண்டு சொன்னான். உடன திரும்பி குகரூபனிட்ட where is your shoes எண்டு கத்தினார். இப்பதான் எல்லாருக்கும் விளங்கீச்சு shoe போடாத்தற்குத்தான் இவ்வளவு நேரமும் சத்தம் போட்டவர் எண்டு. இன்னும் கொஞ்சநேரம் சிங்களத்திலயும் இங்கிலிசிலையும் மாறி மாறி திட்டிப்போட்டு எனக்கு இப்ப ஏன் shoe போடவில்லை எண்டு தெரியவேணும் எண்டு சொல்லி மேலும் கத்தினார். குகரூபன் "எனக்கு shoe கட்டாயம் போட வேணும் எண்டு தெரியாது. இனி போட்டுக்கொண்டு வாறன்" எண்டான். ஆனா அந்தாள் இருந்த ஆத்திரத்தில குகரூபனை வெளியில துரத்திவிட்டுட்டார். பிறகு இங்கிலிஸ் ரீச்சர்மார் தலையிட்டு துணைவேந்தர சமாதானபடுத்தி அவற்ற ராகிங்கை முடியுக்கு கொண்டுவந்தினம்.
இரவு றூமுக்கு போய் எல்லாரும் shoe க்கு polish போட்டு அடுத்தநாள் லெக்சருக்கு போக ரெடி பண்ணினம். துணைவேந்தரே சொல்லிபோட்டார். இனி என்ன. சீனியர்மாருக்கு முகத்தில கரி பூசின மாதிரிதான் என்ற சந்தோசம் வேற. நானும் கொழும்புக்கு வந்து வங்கின புது branded shoeஐ எடுத்து வைத்தன். ஆசை ஆசையா வாங்கின shoe. ஆனா ராகிங்கால போட சந்தர்ப்பம்தான் கிடைக்கெல்ல. அடுத்தநாள் எல்லாரும் வலு ஸ்ரைலா வெளிக்கிட்டு போனம். ஆனா ஹால் வாசலில நாலு வாளி நிறைய தண்ணி இருந்தது. பக்கதில நிண்ட சீனியர் " எங்களுக்கும் நீங்க shoe போடுறது சந்தோசம்தான் ஆனா shoeவையும் காலையும் வடிவா கழுவிபோட்டு போங்கோ" எண்டார். பிறகென்ன, ரெண்டு காலையும் shoe ஒட தண்ணி வாளிக்க வைச்சுபோட்டு சதக் சதக் எண்டு நடந்து லெக்ஸருக்கு போனதுதான்.

2 comments:

Rooban said...

Hi Ganesh,
Good attempt, Well done, Keep it up.
Gugarooban

எஸ் சக்திவேல் said...

ஏன் அந்த "டோர்ச்லைற்" காரனைப் பற்றியும் கொஞம் எழுதியிருக்க்லாம் :-)