Saturday, January 12, 2013

சகுனி

ஒபாமாவின்ர அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு பின்னால, Rayid Ghani தலைமையில,    ஒரு  இரகசிய data mining, data analysis டீம் கடுமையா  வேலை செய்திருக்கு. இதனடிப்படையில்தான் ஒபமவின்ர பிரசாரமும் நடந்திருக்கு. சில பல சகுனி வேலை செய்து காசு சேர்த்து, ஆதரவு திரட்டி தேர்தல்ல வெல்ல கூடியதா இருந்திருக்கு .  ஆக data Crunchers தான் ஒபாமாவின் வெற்றிக்கு முக்கிய கரணம்.

இந்த data Crunching வேலையை நாங்க அப்பவே தொடங்கீற்றமில்ல .

பள்ளிகூடத்தில வருடா வருடம் நடக்கிற இல்ல விளையாட்டு போட்டியில எங்கட இல்லம்  வள்ளுவனை யாராலும் அசைக்க ஏலாது.  எவ்வளவுதான் மற்ற இல்லங்கள் தலைகீழ நிண்டாலும் கடைசியில வள்ளுவன்தான் முதலாவதா வரும். மற்ற இல்லங்கள் தலையை பிச்சுக்கொண்டு யோசித்தாலும் எப்பிடி நாங்க வெல்லுறம் எண்டு கண்டுபிடிக்க முடியேல்ல.

அது நான் O /L  படிச்சுகொண்டிருந்த நேரம். இல்ல விளையாட்டு போட்டிக்கான  நாளும் குறிச்சு, இல்ல தலைவர் உட்பட செயற்குழுவும் தெரிவு செய்தாச்சு.  இல்ல கூட்டம் நடந்த அன்று பின்னேரம் நாதன் மாஸ்டர்  தன்ர றூமுக்கும் கூப்பிட்டு இருந்தார். நாதன் மாஸ்டர் எண்டாலே பிரம்படிதான் ஞாபகத்திக்கு வரும். நானும் பயந்து பயந்து போய் பார்த்தா வள்ளுவன் இல்ல தலைவர்  அமலன் அண்ணாவும் கூடவே இருந்தார்.

  நாதன் மாஸ்டர் கதைக்க தொடங்கினார். "வழமையா நாங்கதான் முதலாவதா வாறனாங்கள். இந்த முறையும் நாங்கள் தான் வரவேணும். அதுக்கு   போட்டியில நல்ல ஓடினா மட்டும் போதாது. மற்ற கழகங்களின் பலம் என்னண்டு பார்க்கோணும்.  எந்தெந்த போட்டியில அவையள் கூட புள்ளி  எடுக்க சான்ஸ் இருக்கு எண்டு பார்க்க வேண்டும். பிறகு அதுக்கு தக்கமாதிரி எங்கட டீமை தெரிவு செய்ய வேண் டும். அதுக்குதான் உன்னை கூப்பிட்டு அனுப்பினான்.  முதல்ல எல்லா வகுப்பு இடாப்பு புத்தகங்களைம்  ( attentant  registers) எடுத்து   ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொருஇல்லத்திலும்  இருக்கிற ஆட்களின்ர பெயரை எழுது. போனவருசம் வெண்ட ஆட்களின் தகவலை எடு.
அதுக்கு பிறகு என்ன செய்யவேணும் எண்டு பிறகு சொல்லுறன் " எண்டார்.

  ஆளை மறைக்ககிற உயரத்துக்கு மேசையில இடாப்பு புத்தகங்கள் அடுக்கி இருந்தது. எல்லா வகுப்பு இடாப்பு புத்தகங்களையும் எடுத்து, அட்டவணை போட்டு,  அந்தந்த இல்லங்களுக்கு கீழ பெயரை எழுத வேண்டும். ஆனா இது லேசான வேலை இல்லை. இப்ப எண்டால் excel  spread sheet இல சுலபமா  அடிச்சு போடலாம். அடுத்த ரெண்டு நாளைக்கு பின்னேரம் football  விளையாட போக ஏலாது . .அதை நினைச்சா எரிச்சலா இருந்தாலும், என்னை தேர்ந்தெடுத்து, இந்த data collection வேலையை தந்தது கொஞ்சம்  பெருமையாதான் இருந்தது. அப்பப்ப சின்ன சின்ன திருகு தாளங்கள் செய்யிறனான் எண்டாலும், கணக்கில நான் கொஞ்சம் பரவாயில்லை.

   இடாப்பு புத்தகத்தில் பெயருக்கு பக்கத்தில இல்லத்தின்ர initial போட்டிருக்கும். அதை பார்த்து அட்டவனையை நிரப்ப வேணும். அப்பத்தான் கவனிச்சன். கடைசியா நடந்து முடிந்த விளையாட்டு போட்டிக்கு பிறகு பள்ளிகூடத்தில சேர்ந்த ஒருத்தருக்குமே இல்ல initial போடா இல்லை.  சுற்றவர ஒருத்தரும் இல்லை. நான் மட்டும்தான். எனக்கு தெரிந்த நல்ல ஓடக்கூடிய ஆனந்தராஜா, சந்திரலிங்கம், மொரின் எல்லாருக்கும் V  எண்டும், பிடிபடாம இருக்க மற்ற ஆட்களுக்கு B , K , E  எண்டு மற்ற இல்ல initial லை போட்டன்.
 
    கடைசி ரெண்டு வருட இல்ல விளையாட்டு போட்டி முடிவுகளையும் எடுத்து யார் யார் எந்தெந்த விளையாட்டு போட்டியில என்னென்ன இடம் எடுத்தார்கள் எண்டு எழுதினன் . எல்லாம் எழுதி முடிய, இல்ல தலைவர் அமலன் அண்ணாவிடம் கொண்டுபோய் கட்டினன். ஆனா அவர் "உதெல்லாம் தேவை இல்லாத வேலை.  எனக்கு இங்க ஆயிரம் வேலை இருக்கு. இன்னும்  ஐந்து  நாளில போட்டியில பங்குபற்றிற ஆட்களின்ர பெயர் பட்டியல் கொடுக்க வேணும்.  உத வைச்சு ஒண்டும் பண்ணேலாது. நீ கொண்டு போய் மாஸ்டரிட்ட குடு " எண்டார் 
    நாதன் மாஸ்டர்  அட்டவணையைப் பார்த்திற்று " இனிதான் முக்கியமான வேலை இருக்கு. நல்லா ஓட கூடிய ஆட்கள் 100 மீட்டர், 200 மீட்டர் , 400 மீட்டர், 800 மீட்டர்,  தடை தாண்டி  ஓடுதல் எல்லாத்திலும் நல்ல செய்வான்கள் . ஆனா ஒராள் மூண்டு போட்டியில்தான் பங்குபற்றலாம். அதிலும் ரெண்டு  ஓட்ட போட்டியில தான் ஓடமுடியும்.  ஆக ஓரளவுக்கு ஓட கூடிய ஆளும் சரியான போட்டியை தெரிவு செய்தால் முதலாவதாக வரலாம்.  ஒவ்வொரு பிரிவிலும் நல்லா  ஓட கூடிய ஆட்களின்ர பட்டியலை எடு. அவங்கள் மற்ற இல்லம் எண்டால், அவங்கள் எந்தெந்த போட்டியில ஓடுறாங்கள் எண்ட விபரத்தையும் எடு.  அவங்களோட போட்டி போடுறது எங்கட நோக்கம் இல்லை.  அவங்கள் ஓடுற போட்டியை தவிர்த்து மற்ற போட்டியை தேர்ந்தெடுத்தால் முதலாவதா வரலாம். கூடுதல் புள்ளிகள் எடுக்கலாம். " எண்டார். எனக்கு அரைகுறையா விளங்கினமாதிரி இருந்திச்சு. விளங்காத மாதிரியும் இருந்திச்சு.

  நல்ல ஓட கூடியவன்களை கண்டுபிடிக்கிறது கஷ்டமான வேலை. அதுக்கு  மற்ற இல்லங்களுக்க இறங்கி ரெக்கி எடுக்க வேணும். ஆராரு எந்த போட்டியில ஓட போறான்கள் என்ட விபரத்தை நைசாஎடுக்க  வேணும். இதுக்கு என்னைவிட சசிதான் சரியான ஆள். சசியை மடக்கி விஷயத்தை சொன்னன் . அவனுக்கு இதெல்லாம் அல்வா சப்பிடுற மாதிரி. ரெண்டு நாளில எல்லா விபரமும் கொண்டு வந்திற்றான். இன்னும் ஒரு படி மேலபோய், unofficial ஆ ஒரு போட்டியே வச்சு யார் யார் வெல்லுவாங்கள் ஏன்ட விபரத்தோட வந்தான்.
   நாதன் மாஸ்டர் அமலன் அண்ணா தயாரிச்ச வள்ளுவன் இல்ல போட்டியில பங்குபற்றுவோர் பட்டியலை எங்களிடம் தந்தார். அமலன் அண்ணா  எங்கட இல்லத்தில இருந்த நல்லா ஓடக்கூடிய எல்லாரையும் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட போட்டியிலேயே போட்டிருந்தார். அந்த பட்டியலின் படி வள்ளுவன் போட்டியில முதலாவதா வாறதுக்கு சான்ஸே இல்லை. நாங்கள் நாதன் மாஸ்ரருக்கு விபரத்தை சொல்ல அவரும் எங்களை பட்டியலை மாத்தி எழுத சொன்னார்.  அண்டைக்கு முழுக்க நானும் சசியும் இருந்து  எல்லா தகவலையும் அலசி ஆராஞ்சு புதிசா ஒரு அட்டவணை தயாரிச்சம். வள்ளுவன் இல்லம் எடுக்கக்கூடிய புள்ளிகளை கூட கணக்கிட்டிருந்தம். கனக்க குறுக்கு கேள்விகளுக்கு  பிறகு நாதன் மாஸ்டர் எங்களின் பட்டியலை அங்கீகரிச்சு,  பட்டியலை சமர்ப்பிக்க, அமலன் அண்ணா எங்களில படு கடுப்பில இருந்தார்.

    இல்ல விளையாட்டு போட்டி முடிவுகள் நாங்கள் எதிபார்த்த மாதிரிதான் இருந்தது. இல்ல புள்ளிகள்  கூட  கிட்டதட்ட நாங்கள் கணக்கிட்டதோடு ஒத்து போனது.  19 வயதுக்கு உட்பட்டோர் ஓட்டம் தொடங்க முதல் சசி ஓடி வந்தான்.
வசந்தன்  அண்ணா போட்டியில ஓட போறார் எண்டும் எப்பிடி எங்கட   லிஸ்ட் ரில அவற்ற  பெயர் இல்லாம போனது எண்டு கேட்டான். வசந்தன் school  champion. மற்ற இல்லம். ஓடினா கட்டாயம் முதலாவதா வருவான்.  ஆனா O/L எக்ஸாம் முடிந்தபிறகு வசந்தன் ஸ்கூல் பக்கம் வரவே இல்லை.  அதால இடாப்பு  புத்தகத்தில அவன்ர பெயர் இல்லை. இடாப்பு புத்தகத்தில பெயர் இல்லை எண்டால் போட்டியில ஓட  ஏலாது.  விஷயத்தை அமலன் அண்ணாவிடம் சொல்ல, அவரும் protest  பண்ண, வசந்தன் போட்டியில் இருந்து நீக்கபட்டார்.


  கடைசியில வள்ளுவன் இல்லம் அமோக வெற்றி பெற்றது.  இல்ல விளையாடு போட்டி பரிசளிப்பு மேடையில அதிபர் வள்ளுவன் இல்ல வீரர்களையும் புகழ்ந்து தள்ளினார். அமலன் அண்ணாவையும் அவரின் செயற்குழுவையும் பாராட்டினார். ஆனா நாதன் மாஸ்டரையும் எங்களையும் யாரும் கண்டுக்கவேயில்லை.

  என்ன ஒரு கவலை. நானும் champion  ஆ வார மாதிரி பார்த்து பார்த்து போட்டியை select  பண்ணினன்.  ஆனா நான் செய்த திருகு தாளமே எனக்கு ஆப்பா  வந்தது. அன்டனி  கிட்டடியிலதான் ஸ்கூல்ல சேர்ந்திருந்தான். அதால நான்தான்  அவன்ர வகுப்பு இடாப்பு புத்தகத்தில K  எண்டு போட்டு மற்ற இல்லத்தில இணைத்து இருந்தன் . ஆனா  அவன் ஒரு record  breaking  சாம்பியன் ஆ இருப்பான்  எண்டு நினைக்கவே இல்லை.