Tuesday, December 18, 2012

English Vinlish


எனக்கும் இந்த  நம்மூர் கடக்கு புடக்கு ஆங்கிலத்தை விட்டிட்டு கஷ்புஷ் எண்டு இங்கிலீஷ் கதைக்க வேணும் எண்டு கன  நாளா ஆசை.  என்ர மகன்கூட
இப்ப என்னோட கதைக்கேக்க கஸ்ரபட்டு srilankan  slang இலதான்  கதைக்கிறான். இப்பிடியே போனால் கொஞ்ச நாளில English Vinglish படத்தில வாறமாதிரி "அப்பருக்கு ஆங்கிலம் வடிவா தெரியாது " எண்டு சொல்லவும் chance இருக்கு .  இதை விட பெரிய பிரச்சினை  இப்ப இந்த நாட்டு குடியுரிமை எடுக்கோணும் எண்டால் இங்கிலீஷ் எக்ஸாம் பாஸ் பண்ணவேணும். அது கடக்கு புடக்கில இருந்து கஷ்புஷ்க்கு மாறாத  வரைக்கும் சரிவராது போல கிடக்கு.  எப்பிடித்தான் வேலை செய்யிற இடத்தில சமாளிச்சுக்கொண்டு போனாலும் என்ர இங்கிலிஷில ஊர்வாடை அடிக்கத்தான் செய்யுது.

 ஊரில பள்ளிகூடத்தில படிக்கேக்க, இங்கிலீஷ் வகுப்புக்கு  போகம, football விளையாட ஓடிருவம்  ரீச்சரும் இதுகள் வகுப்பில இருந்து மற்றவையையும் கெடுக்கிறதிலும் பார்க்க வராம இருக்கிறதே நல்லது எண்டு எங்களை கண்டுக்கிறதே இல்லை. பிறகு A/L  எடுத்திற்று சும்மா இருக்கேக்க இங்கிலீஷ் படிக்கிறன் எண்டு ஐயர் வாத்தியில தொடங்கி  ஊரில இருக்கிற எல்லா வாத்திமாரிட்டையும்  திரிஞ்சு இருக்கிறன். ஐயர் வாத்தியாரிட்ட ஆங்கிலம் படிச்சமோ இல்லையோ வேற கன விஷயம் படிச்சனாங்க. அது வேற கதை. ஆக நான் அப்பவே பீற்ரரில கொஞ்சம் weak .

    வெள்ளிக்கிழமை காலம  வேலைக்கு போறதுக்கு பஸ் ஸ்டாண்டில நிண்டன். கார்த்திகை மாதம்தான் இன்னும் சமர் தொடங்க இல்லை எண்டாலும் , விடிய ஏழு மணிக்கே வெயில் எறிக்க தொடங்கிற்று. வெள்ளிகிழமை எண்டால் ஒரு வசதி. வெயில் வெக்கைக்கு தோதா T -ஷர்ட் போட்டுக்கொண்டு  வேலைக்கு போகலாம். பஸ் ஸ்டாண்டில நிண்ட ஏழெட்டு  பேரில அனேகமா எல்லாரும் iPad அல்லது   iPhone ஐஒ நோண்டிக்கொண்டிருக்க, நான் கதைக்கிறதுக்கு யாராவது நம்மூர் காரர் நிக்கீனமா எண்டு தேடினன்  இந்த வெக்கேக்கையும் கோட்டு சூட்டோட செல்வநாதன் அண்ணை பக்கத்தில நிண்ட வெள்ளைக்காரனோட பலத்த சத்தமா இங்கிலிஷில அறுத்துக்கொண்டு நிண்டார் . செல்வநாதன் அண்ணை ஆஸ்திரேலியாவுக்கு வந்து ரெண்டு வருஷம் கூட ஆகேல்ல. ஆனா அதுக்குள்ளே அவற்றை நடை உடையும் மாறிற்று . இங்கிலிசும் மாறிற்று.

  இவற்றை அறுவை தாங்கேலாமலோ என்னவோ வெள்ளைக்காரன் phone னுக்கு தாவ, நான் "வணக்கம் செல்வநாதன் அண்ணை " எண்டு கதையை தொடக்கினன். என்னை  பக்கத்தில கண்டது கொஞ்சம் எரிச்சலா இருந்தாலும் காட்டிகொள்ளாமல் "Please call  me நேத்தன்" எண்டார். செல்வநாதன் நாதானாகி நேத்தனாக மாறிற்று. "நேத்தன் அண்ணை,  கோட்டு  சூட்டு இங்கிலீஷ் எண்டு கலக்கிறீங்க . எப்பிடிண்ண " எண்டன் . என்ர கேள்வி அவருக்கு கோபத்தை கிழறி இருக்கவேணும். பொரிஞ்சு தள்ளி விட்டுட்டார்.

   "டேய் இந்த நாட்டுக்கு வந்தா இந்த நாட்டுக்காரன் மாதிரி வாழவேனும். அவங்களோட பழகவேணும். அவனை மாதிரி பேசவேணும்.  ஆனா நீ என்ன செய்யிறாய். office க்கு போன, கம்ப்யூட்டருக்க தலையை வச்சுக்கொண்டு இருக்கவேண்டியது. வெளியில வந்தா இடியப்பகடை தோசைக்கடை எண்டு திரிய வேண்டியது. பொழுது போக்குக்கு கூட கோயிலுக்குதானேயடா போறிங்க. பிறகு எப்பிடிடா உருப்படுவீங்க"  எண்டுட்டு வந்த பஸ்சில ஏறி போயிற்றார்.

   அண்ணை செல்லுறதிலும் ஒரு ஞாயம் இருக்கிறமாதிரி பட்டுச்சு. சரி ட்ரை பண்ணிதான்  பார்ப்பம் எண்டு யோசிச்சன். வழமையா ஆபீஸில சொல்லுற "குட் மோர்னிங்" ஐ விட்டிற்று "குட் டே மைற் "   சொன்னன் . பத்து மணிக்கு coffee வான் வரும். அநேகமா எல்லா வெள்ளையளும்  கீழ போய் கோபி குடிச்சு கொஞ்ச நேரம் அரட்டை அடிப்பாங்கள்.  இதுதான் நல்லநேரம் எண்டு நானும் காபி குடிக்க போனன் . கூட்டம் கூட்டமா நிக்கிற ஆட்களை விட்டிட்டு தனிய நிண்ட Ryan  னிட்ட போனன். ரயனோட கிரிக்கெட் பற்றியும் கதைக்கலாம்.

"ஹாய் Ryan . How  are you ? Did  you  watch  the cricket yesterday ? " எண்டன் .

அவன் Adelaide Oval இல ஆஸ்திரேலியா வெல்லாத கடுப்பில இருந்திருக்கிறான்.

"Yaa  I saw the f**king Match. No f**king fast bowlers in the f**king team to win the f**king game mate . F**king Ponting  and the new bloke Quiney  f**ked  up and they are  going to f**k the whole season.

If Clarky don't change the f**king team, I tell you f**king Sri lanka is going to f**k us on f**king boxing day match "

அதுக்கு பிறகு எனக்கு வேற ஒரு சொல்லும் காதில விழேல்லை. அந்த ஒரு சொல்லு மட்டும் காதில இரைஞ்சு கொண்டிருந்த மாதிரி இருந்தது. என்னடா இவங்கள் ஒரு சொல்லை வச்சி, எழுவாயாய், பயனிலையாய், செய்வினையாய், செயப்பாட்டு வினையாய், அகிறினையாய், உயரினையாய் எல்லாத்துக்கும் பாவிக்கிறாங்கள்.  அதுக்கு பிறகு இங்கிலீஷ் கதைக்கிற  ஆசை எனக்கும் கொஞ்சம் விட்டு போச்சு.


நேற்று கோயிலுக்கு போன நேரம், என்ர பழைய பள்ளிகூட மாஸ்ரரை கண்டன். மகனையும்  பேரனையும் பார்க்க சிட்னிக்கு வந்ததா சொன்னார். கன நேரம் ஊர் கதை கதைச்ச பிறகு மாஸ்டர் கேட்டார். "என்ன தம்பி வந்து கனகாலம் எண்டுறீர் . இங்கிலீஷீல ஒரு மாற்றமும் இல்லை " எண்டார் .

எனக்கும் இங்கத்தைய இங்கிலீஷ் கதைக்க தெரியும். எதுக்கு வம்பு எண்டு கதைக்கிறேல்ல " எண்டன் .

 எட்டாம் வகுப்பில தூஷணம் கதைச்சு மாஸ்டரிட்ட பிரம்படி வாங்கினது ஞாபகத்தில வந்து போனது.



3 comments:

எஸ் சக்திவேல் said...

வாங்கோ வாங்கோ கனகாலம் காணல்லை

உந்த இங்கிலீஷ் பிரச்சினையாலை பேராவில அடிதடி நடந்தமாதிரி ஒரு ஞாபகம். வரவர மறதிப் பிரச்சினையும். பேராவில ஒருவர் அடிக்கடி இங்கிலீஷ் பழமொழிகள் சொல்லுறவர். இப்ப என்ன செய்யுறாரோ தெரியல்லை.

Ravies Pasupathy said...

வணக்கம் கணேஷ் அண்ணா,ஒரு வருடத்திற்கு பிறகு வந்தாலும் நல்ல செய்தியோடதான் வந்திருக்கிறீங்க.நீங்க இங்கிலீஷ் எண்டதுமே மற்றப் பக்கத்தால மாறுவம் எண்டுதான் பார்த்தனான் என்றாலும் கனநாள் காணேல்லை,பார்க்காமல் போக மனசு கேக்கயில்லை.
இப்ப தமிழும் நல்லா மாறிப்போச்சு "அ"என்றால் ஆனா என்று சொல்லுவம் இப்ப "அ"அ,என்றுதான் படிப்பிக்கினம்.இது பிள்ளையளுக்கும் சுகமா விளங்கும்.அரவுப்பிரச்சனையல் எல்லாம் வராது.நாங்க "மடு" என்றால் மாடு என்றும் "மாடு"என்றால் மடு என்றும் வாசித்த ஆட்கலெல்லோ!
நன்றி
வணக்கம்

Anonymous said...

mmm after loooong time

jkumar