Thursday, June 19, 2008

முதல் தாக்குதல்

அப்ப நாங்கள் நாலாம் வகுப்பு படிச்சுக்க்கொண்டு இருந்தனாங்கள் எண்டு நினைக்கிறன். பள்ளிகூடத்துக்கு நாங்கள் நடந்துதான் போறனாங்கள். வீட்டில இருந்து பள்ளிகூடம் கிட்டதட்ட ரெண்டு கிலோமீற்ற்ர் தூரம் இருக்கும். நான், சண்முகமணி, நிமலன், சிவானந்தன், சுதா, எண்டு கனபேர் ஒண்டா போறதால களைப்பு இல்லாம போய்வருவம். பள்ளிகூடம் விட்டு வரேக்க, நொத்தார் விட்டு மாமரத்தில மாங்காய் புடுங்கிறது, தந்தி கம்பிக்கு கல் எறியிறது, வெள்ளத்தில் வெடி அடிக்கிறது எண்டு நேரம் போறதே தெரியாது. ஒரு மணிக்கு பள்ளிகூடம் விட்டா ஒரு நாலு நாலரைக்கு வீடு வந்து சேருவம். நொத்தாருக்கு நல்ல மனசு. கிளி கொத்தின மாங்காய், கீழ விழுந்த மாங்காய் எல்லாம் எடுத்து வடிவா வெட்டி தருவார். எண்டாலும் எங்களுக்கு கள்ள மாங்காய் புடுங்கிறதில ஒரு சந்தோசம். மாமரத்துக்கு கல் எறிந்து விழுகிற மாங்காய்களை பொறுக்கிக்கொண்டு ஓடுவம்.
ஓருநாள் எல்லாரும் பள்ளிகூடம் விட்டு வந்துகொண்டு இருக்கேக்க, தூரத்தில ஒரு பொலிஸ் ஜீப் ஒண்டு எங்களை நோக்கி வந்துகொண்டுருந்தது. சிவானந்தன் என்ன நினைத்தானோ தெரியாது ஒரு கல்லை எடுத்து பொலிஸ் ஜீப்புக்கு எறிந்து போட்டான். கல் ஜீப் Bபோனற்றில டொங் எண்டு பெரிய சத்தத்தோட விழுந்தது. பொலிஸ் ஜீப் போன வேகத்தில ரிவேசில வந்தது. என்னையும் நிமலனையும் விட மற்ற எல்லாரும் வயலுக்கிளால விழுந்தடித்து ஓடிற்றாங்கள். எனக்கு பயத்தில வயித்த கலக்கிச்சு. ஆனா பொலிஸ் எங்க ரெண்டு போரையும் விட்டிட்டு, ஒழுங்கைக்கிளால ஜீப்பை திருப்பி ஓடின எல்லாரையும் மடக்கி பிடிச்சி ஜீப்பில ஏத்திக கொண்டு போயிற்றினம். நானும் நிமலனும் சந்திக்கு அழுதுகொண்டு ஓடினம். அங்க சிவானந்தனின் பெரியப்பா சயிக்கிள் கடை வச்சிருக்கிறார். அவரிட்ட சொல்லுவம் எண்டுதான் ஓடினாங்கள். ஆனா அங்க எங்களுக்கு முதலே மற்ற எல்லாரும் சயிக்கிள் கடையில நிக்கிறாங்கள். சிவானந்தன் மட்டும் அழுதுகொண்டு நிக்கிறான்.
என்ன நடந்து எண்டா, பொலிஸ் எல்லாரையும் பிடிச்சு நல்லா வெருட்டி போட்டு, ஊர் எது, அப்பா பெயர் என்ன எண்டு விசாரிச்சிரிக்கீனம். சிவானந்தன்ர பெரியப்பா சந்தியில கடை வச்சிருக்கிறதால அவரிட்ட சொல்லுறதுக்கு எல்லாரையும் சந்திக்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கீனம். நடந்தத கேட்ட பெரியப்பா சிவானந்தனுக்கு நாலு போடு போட்டிருக்கிறார். மற்ற எல்லாரும் பொலிஸ் ஜீப்பில ரிப் அடித்த சந்தோசத்தில சிரிச்சுக்கொண்டு நிக்கிறாங்கள்.
நிலமையை பார்த்தீங்களா? சும்மா நிண்ட நானும் நிமலனும் கால் கடுக்க ஓடி போறம். கல் எறிந்தவனுக்கும் அவனோட சேர்ந்து ஓடினவங்களுக்கும் ஓசி பொலிஸ் ரிப்.

1 comment:

jeyandrabalan said...

Ganesh, Wonderful work. I laghed a lot with this one. You can remember a lot of things from the past. Well done. You should write more and more!!!

Anpin Jeyandrabalan