Thursday, August 4, 2011

கோட்டு வாசல் மிதியாதே


வேலை முடிஞ்சு வீட்ட வெளிக்கிடேக்க  ஆறு மணி.  சிட்னி வாகன நெரிசலில நெரிபட்டு வீட்ட  போய்  சேர எப்பிடியும்  ஏழு ஏழரை ஆகிரும்.
யாழ்ப்பாணத்தில  குச்சொழுங்கை எல்லாம் சைக்கிள்ள ஓடி திரிஞ்ச பழக்கதில, மெயின் ரோட்டில traffic  எண்டா, ஒழுங்கைக்க காரை திருப்பி, குறுக்கால ஓடி,  கொஞ்சம் கெதியாவே வீட்ட வந்திருவம்..  ஆனா, speed camera , red light camera , stop sign , no right turn , no left turn , bus lane, T lane எண்டு ஆயிரத்தெட்டு தடங்கல்கள்.   மாட்டுப்பட்டா, நூற்று கணக்கில சுளையா காசு போயிரும். என்ர கார் ஓட்டம் கொஞ்சம் அப்பிடி இப்பிடி எண்டாலும், இது வரைக்கும் ஒருக்காலும்  பிடிபடேல்ல.

     வீட்ட வந்து letter box இல விளம்பர குப்பைகளுக்குள்ள கிடந்த பழுப்பு நிற கடிதத்தை உடைச்சு பார்த்தா, No parking இல காரை நிப்பாட்டினதுக்கு 90 டொலர் தண்டம் எண்டு வந்திருந்தது.  அவசரத்துக்கு இஞ்ச  parking  கிடைக்காது. அண்டைக்கும் அப்படித்தான், பெடியன்ர ஸ்கூலுக்கு பக்கத்தில  parking தேடி அலைஞ்சு, கடைசியா no parking  ஓரத்தில இருந்த கொஞ்ச  இடத்தில காரை விட்டிட்டன். ஆனா காரை முழுசா விட முடியேல்ல. காரின்ர பின் பக்கம் கொஞ்சம் no parking குள்ள .  சரி கொஞ்சம் தானே எண்டு park  பண்ணிற்று போய்ரன்.  அதுக்குதான் இண்டைக்கு தண்டம் வந்திருக்கு.  வேலையால வந்த எரிச்சலோட இதுவும் சேர்ந்து, "கோட்டுக்கு போனாலும் பரவாயில்லை. இந்த காசு கட்டுற இல்லை " எண்டு புறு புறுத்துக்கொண்டு வீட்டுக்க போனன்.

   அது ஆயிரத்து தொள்ளயிரத்து எழுபதுகளில் சிறிமாவோ பண்டார நாயக்க நாட்டை ஆண்ட காலம். சனம் ஒரு இறாத்தல் பாணுக்கு, விடிய காலம நாலுமணிக்கு போய் சங்க கடையில வரிசையில நிண்ட காலம். பாணுக்கு மட்டுமில்ல, அரிசிக்கும் பஞ்சம் தான். ஒரு மாவட்டத்தில இருந்து மற்ற மாவட்டத்துக்கு நெல்லு கொண்டு போக ஏலாது. அப்பிடி ஒரு சட்டம். ஆனா எங்க தாத்தா  வன்னியில அவற்ற வயலில விளைஞ்ச நெல்லில ரெண்டு மூட்டையை, ஊருக்கு வரேக்க  போட்டுக்கொண்டு வந்திற்றார். ஆனா வழியில ஆனையிறவுல போலீஸ் மறிச்சு போட்டங்கள். போலீஸ் க்கு காசை கொடுத்து சமாளிச்சிருக்கலாம். இல்ல பேசாம தண்டத்தை கட்டி இருக்கலாம். ஆனா "என்ர வயல்ல விளைஞ்ச நெல்லு. நான் வீட்ட கொண்டு வர ஏலாது எண்டது என்ன ஞாயம்" எண்டு கோட்டுக்கு போயிற்ரார்.சிறிமாவின்ர ஆட்சி, போய் JR ஆட்சி வந்து சிறிமாவோவின்ர citizenship ஐயும் பறிச்சாசு. ஆனா தாத்தாவின்ர கோட் கேஸ் முடிஞ்ச பாடில்ல. 

   நானும் ஒரு நாள், கோட் பார்க்க தாத்தாவோட போனனான். ஊர்காவல்துறை ஒரு அழகான பட்டினம். ஒருபக்கம் படகு துறை, Customs office , போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி. , கடலுக்கு அந்த பக்கம் கரைநகர்ல கடற்படை முகாம், Ceynor  பாக்டரி, கடலுக்கு நடுவில ஒல்லாந்தர் காலத்து கடற்கோட்டை.  இந்தியாவில இருந்து வடக்கன் மாடுகளும், வீடு கட்டுற ஓடும் இங்கை வந்து இறங்கிறது.  மற்ற தீவுகளுக்கு  இஞ்ச இருந்துதான் படகு சேவை தொடங்கிறதால படகுத்துறை எப்பவும் கலகலப்பா இருக்கும். அந்த படகுகளில் ஒன்றுதான் குமுதினி. அந்த படகில்தான் 85 ம் ஆண்டு நடு கடலில வைத்து கடற்படையால், குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் நாற்பதுக்கு மேற்பட்டோர்   குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். மேலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருந்தனர்.

தாத்தாவோட கேஸ்க்கு நாங்கள் நேரத்துக்கே போயிற்றம். விதி படத்தில வாற மாதிரி, வாத, பிரதி வாதங்கள் சூடு பறக்கும்   எண்டு நம்பியிருந்த எனக்கு எமாற்றம்தான். போன உடனேயே இன்னொரு நாளுக்கு கேஸ் பின்போட்டு அனுப்பி விட்டுடினம். கடைசியா  பிற்போட்டு, பிற்போட்டு, தாத்தா இறந்த பிறகும் கோட்டில இருந்து கேசுக்கு ஆஜர் ஆக சொல்லி கடதாசி வாறது நிக்கேல்ல.. 


  இரவு சாப்பாடு முடிய போய் கம்ப்யூட்டரை ON பண்ணினன். "   என்னப்பா வந்ததும் வராததுமா கம்ப்யூட்டருக்கு முன்னால போய் இருக்கிறியள் " எண்டதுக்கு " கொஞ்சம் பொறும் இந்த parking டிக்கெட் ஐ கட்டிபோட்டு வாறன்" எண்டன்.  
     

3 comments:

எஸ் சக்திவேல் said...
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...

என்ரை கதை வேறை. school zone இலே விட்டது எண்டு சொல்லி 200 ச் சொச்ச டொலரும் 2 demerit புள்ளிகளும் போயிற்று.நானும் கோர்ட் இற்குப் போகாமல் காசைக் கட்டிவிட்டேன்.

court case எண்டத்தான் ஞாபகம் வருது, நான் பால் குடியாயிருந்த காலத்தில் , அப்பா ஒரு இளந்தாரியாகப் போய்வந்துகொண்டிருந்த court case இன்னும் முடியவில்லை. அப்பா செத்து 25 வருடங்கள் ஆயிற்று.

இராஜராஜேஸ்வரி said...

கோட்டு வாசல் மிதியாதே"