Tuesday, August 16, 2011

பஸ் டிக்கெட்டும் தோசை கடையும்

         பள்ளி கூடத்தில மகனை இறக்கேக்க "அப்பா ice block வாங்க வேணும். ஒரு டொலர் தாங்கோ" எண்டு கொஞ்சம் அதட்டலாவே  கேட்டான்.  விடிய காலமா இறக்கி விட்டிட்டு வேலைக்கு போற அவசரத்தில நான்.  இந்த நேரம் கேட்டு அடம் பிடிச்சா, கட்டாயம் கிடைக்குமென்று நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறான். இப்ப நிண்டு அவனோட வாக்குவாத பட நேரமில்லை. ஒரு டொலரை எடுத்து நீட்டிற்று,  வாகன நெரிசலில நானும் ஐக்கியமானேன்.  
             
         அந்த நாளில எங்களுக்கு காசு கையில கிடைக்கிறது எண்டது குதிரை கொம்பு மாதிரி.  Pocket money எண்டு ஒண்டு இருக்கு எண்டு எங்களுக்கு அப்ப தெரியாம போச்சு. ஆனா பழைய போத்தல், பித்தளை, அலுமினியம் வாங்கிறவற்ற புண்ணியத்தில அடிக்கடி ஐஸ் பழம் வாங்கி குடிச்சிருவம். அப்பா தோட்டத்தில, அடிச்சு முடிச்ச மருந்து போத்தல் ஐஸ் பழமா மாறி இருக்கும்.  ஒரு மருந்து போத்தலுக்கு ஒரு ஐஸ் பழம்,  யானை சோடா போத்தலுக்கு ரெண்டு பழம், பழைய மூக்கு பேணிக்கு மூண்டு ஐஸ் பழம் எண்டு ஒரு கணக்கே இருக்கு. எங்களுக்க நடக்கிற பண்டமாற்று எல்லாம் ஐஸ்பழ கணக்கிலதான் நடக்கும். 
                   ஒருக்கா நான் என்ர காந்தி தாத்தா படம் போட்ட இந்தியன் முத்திரையை மூண்டு ஐஸ் பழத்துக்கு விக்க, ரவி பதிலுக்கு வீட்ட கிடந்த மூக்கு பேணிக்கு ஆட்டைய போட்டுட்டான். இது தெரியாம நான் மூக்கு பேணிய வீட்ட கொண்டர, அம்மா "அங்க பேணிய தேடி திரியினம். இது என்னெண்டு உன்னட்ட  வந்தது. கொண்டுபோய்  குடுத்திற்று வா" எண்டு  விரட்டினா. கடைசியா முத்திரையும் போய் பேணி கள்ளன் எண்டு பட்டம் வாங்கினது தான் மிச்சம்.        

                              ஆனா பள்ளிகூடத்துக்கு முன்னால இருக்கிற மணி அண்ணையின்ர தோசைக்கடையில இந்த பண்டமாற்று எல்லாம் சரி வராது. ஐம்பது சதத்துக்கு, ஒரு பூவரசம் இலையில ரெண்டு தோசையும் கொஞ்ச சம்பலும் தருவார். தோசை சைஸில பூவரசம் இலையா எண்டு யோசிக்க வேண்டாம்.  பூவரசம் இலை சைஸில தோசை அவ்வளவுதான். மத்தியான நேரம்  தோசைக்கடை நிரம்பி வழியும். இடிச்சு பிடிச்சு முன்னுக்கு போறது கஸ்ரம் எண்டாலும், கையை மட்டும் காசோட முன்னுக்கு நீட்டி ஒருமாதிரி தோசையை வாங்கி போடுவன்.
     தோசை வாங்க வீட்ட காசு வாங்கவும் ஒரு ஐடியா வச்சிருந்தனான். வழமையா பள்ளிகூடத்துக்கு நடந்துதான் போறனாங்க. ஆனா கொஞ்சம் லேற் ஆகிற்ரா பஸ்சில போக அம்மா ஒரு ரூபா தருவா. மினி பஸ்சில போக ஒரு ரூபா.ஆனா CTB பஸ்சில ஏறினா எழுபத்தைந்து சதம்தான். ரெண்டு தரம் லேட்ரா வெளிக்கிட்டா , தோசைக்கு காசு  சேர்த்திரலாம். உந்த CTB பஸ்சால வேற நன்மைகளும் இருக்கு. ஊர்ல இருக்கிற வாழைக்குலை எல்லாம்  கெதியா பழுக்கிறது உதாலதான். நுளம்பு (கொசு) தொல்லையை குறைக்கவும் CTB பஸ் உதவுறது. என்ன இறங்கேக்க கொஞ்சம் தள்ளி நிக்கவேணும். இல்லை எண்டா உங்களுக்கும் புகை அடிச்சு போடும்.
.                           ஒரு ரூபா குடுத்து டிக்கெட் எடுத்திற்று இருபத்தைந்து சதம் மிச்சம் கேட்டா, கண்டக்டருக்கு கோபம் வந்திரும். கேக்காட்டி தர மாட்டார் எண்ட படியால, நச்சரிக்கிறதை தவிர வேற வழி இல்லை. ஒரு நாள் இப்பிடித்தான், மிச்சம் கேட்டதுக்கு டிக்கெட்க்கு பின்னால இருபத்தைந்து எண்டு எழுதி தந்திற்று , இறங்கேக்க  வாங்கு எண்டு  சொல்லிற்று முன்னுக்கு போயிற்றார். நானும் இறங்கிற அவசரத்தில திருப்பி கேக்க மறந்து போனன். மத்தியானம் மணியண்ணையின்ர கடையில, இருபத்தைந்து சதத்தையும் பஸ் டிக்கெட்ஐயும் முன்னுக்கு நீடடினன். ஆனா மணியண்ணை "யாரடா அவன் இருபத்தைந்து எண்டு பேப்பரில ஏழுதி நீட்டுறவன் " எண்டு கையை பிடிச்சிர்றார்.  நிலைமையை விளங்கபடுத்தி கையை விடுவிக்கிறத்துக்குள்ள போதும் போதும் எண்டு போச்சு.

 

5 comments:

Anonymous said...

wow great bus ticket and dosai shop.
but starting with dollars..mmm i think Rupees more better.

எஸ் சக்திவேல் said...

>>ஆனா பள்ளிகூடத்துக்கு முன்னால இருக்கிற மணி அண்ணையின்ர தோசைக்கடையில இந்த பண்டமாற்று எல்லாம் சரி வராது.

ஊத்தை எண்டாலும், ஊர்க் கடைத் தோசை தோசைதான். டக்கெண்டு ஒருக்கா ஊருக்குப் போய் தோசை அடிக்க வேணும் எண்டு ஒரு 'பீலிங்".

Rathnavel said...

நல்ல பதிவு.
நல்ல எழுத்து நடை. தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

ravies said...

உண்மையை உண்மையாய் எழுதியிருக்கிறீங்க,
முந்தி ஒரு பத்து சதத்தை அம்மாவிடம் இருந்து
வாங்க எவ்வளவு கஷ்ரப்பட்டிருப்பம் என்பதை இப்ப
நீங்க நினைவுபடுத்தியிருக்கிறீங்க.வாளிக்கம்பியிலிருந்து
நெளிஞ்ச அலுமினியச்சட்டிவரை அன்று எமக்கு தங்கம்தான்.
ஐம்பது சதம் கையிலிருந்தா பள்ளிக்கூடத்தில நாங்களும்
அம்பானிதான்.

Jeya said...

supper.."old is gold".... continue.... your writing...GOOD LUCK.