Thursday, September 8, 2011

ஒரு அகதியின் டயரி - 1


அகதி வாழ்க்கை ஈழத்தமிழனின் தலைவிதி, இதுக்கு நானும் விதிவிலக்கில்ல. எண்பத்தி நாலாம் ஆண்டு முதல் முதலா வீட்ட விட்டு  அகதியா வெளிக்கிட்ட நாள் முதலா, ஊருரா அலைஞ்சு, நாடு நாடா அலைஞ்சு கடைசியா இங்க வந்து தஞ்சம் அடைஞ்சு இருக்கிறன்.
  வன்னியில எங்கட மக்கள் பட்ட கஷ்ரத்தோட பாத்தா, நான்  பட்டதெல்லாம்  தூசு எண்டாலும், அதையும் எழுதுறன்.  இந்த தொடர்பதிவை நிம்மதி தேடி, நாட்டை விட்டு, உடமைகளை துறந்து,   படகேறி பாக்கு நீரிணையை கடக்க முற்பட்டபோது,   பொங்கும் கடலில்    மடிந்து போன எம் உறவுகளுக்கு காணிக்கையாக்குகிறேன்.

  .      யாழ்ப்பணம் தீவுபகுதியில இருக்கு எங்கட ஊர்.   கடலுக்கு பக்கத்தில இருக்கிற உவர் நிலம் எண்டாலும், புகையிலை, மிளகாய், வெங்காயம் எண்டு பயிரிட்டு கஷ்ரபட்டு உழைக்கிற விவசயிகள், அதை கொண்டுபோய் இலங்கை முழுக்க விக்கிற வியாபாரிகள் எண்டு ஒரு பிஸியான ஊர்.  ஊருக்க ரெண்டு கோயில். அங்க நிண்டு அரட்டை அடிக்கிற பழசுகள். சைக்கிள்லில  சுழட்டிக்கொண்டு திரியிற இளசுகள், எல்லாம் நம்ஊரிலும்  உண்டு. யாழ் கோட்டை, காரைநகர், நயினா தீவு எண்டு மூண்டு முகாம்களுக்கு இடையில இருந்தாலும், அப்பப்ப வந்து  விழுந்து வெடிக்கிற  செல்களை தவிர ஊர் அமைதியாதான் இருந்தது.


 ஒருநாள் விடிய காலம ஐந்தரை மணி இருக்கும். அம்மன் கோயில் ஒலிபெருக்கியில பெரிசா பக்திப்பாட்டு போய்க்கொண்டிருந்தது. அம்மன் கோயில் பாட்டு சத்தம், ஊரில இருக்கிற கொஞ்ச கும்பகர்ணனின்ர சொந்தகாரரை தவிர, மற்ற எல்லாரையும் நித்திரையால எழுப்பி விட்டிருந்து. நானும் தம்பியும் எழும்பி முகம் கழுவீற்று, அம்மா காச்சி தந்த பாலையும் குடிச்சிற்று, மாடுகளை தரவை காட்டுக்கு ஒட்டி கொண்டு போய் கொண்டிருந்தம். ஊருக்கு மேற்கால தோட்டவெளி. அதையும் தண்டி போனா கடற்கரைஐ ஒட்டி இருக்குது தரவைக்காடு. பள்ளிகூடம் போக முதல், மாடுகளை கொண்டு போய் தரவையில மேய விட வேண்டியது எங்கடவேலை . ஊரில இருக்கிற சில பேருக்கு, காட்டுக்கு போய் கற்றோட்டமா  காலை கடன் முடிச்சாத்தான் அண்டைய பொழுது விடிஞ்ச மாதிரி இருக்கும். அவையும் எங்களோட சேர்ந்து காட்டு பக்கம் வந்து கொண்டிருந்தினம். நாங்க தரவை காட்டுக்கு நடுவில நிக்கிறம், தலைக்கு மேலால ஏழு  ஹெலிகாப்டர்கள் பதிவா கரம்பன் பக்கமா பறந்து போச்சுது. முதல்ல விடுப்பு பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள், சூட்டு சத்தம் கேக்க தொடங்கின உடன, விழுந்தடிச்சுகொண்டு வீட்ட ஓடி வந்திற்றம்.

   சூட்டு சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. முதல்ல என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல. ஆனா ஒன்பது, ஒன்பதரை  மணி அளவில கரம்பன் ஊர் சனமெல்லாம் அகதியா எங்கட ஊர் பக்கம் வர தொடங்கிற்றினம். நேவிக்காரன் கரம்பன் கடற்கரை பக்கமா  படகிலயும்  ஹெலிகாப்டர் இலயும் வந்து இறங்கிற்ரான் எண்டு அவ சொல்லித்தான்  எனக்கு தெரியும். நான் எங்கட வீட்டு மதிலில இருந்து, சனம் அகதியா, எங்க போறது எண்டு தெரியாம, கால் போன போக்கில,  போய் கொண்டிருக்கிறதை வேடிக்கை  பார்த்துக்கொண்டு இருந்தன். படுக்கையால  எழும்பி, உடுப்பு மாற்றக்கூட நேரம் இல்லாம. போட்ட உடுப்போட, கையில கிடைச்சதை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் கொண்டிருந்திச்சினம் .  அவையளோட வந்த நாய்களும், எங்கட ஊர் நாய்களும் சண்டை போட்டு, அதுகள் வேற ஊரை அமர்கள படுத்திக்கொண்டிருந்ததுகள்.

     முதல்ல  சும்மா விடுப்பு பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவும் அவற்ற friends உம் திடீர் தொண்டர்களா மாறி வந்த எல்லாரையும் அம்மன் கோயில் மடத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தினம். கொஞ்ச நேரத்தில கோயில் மடம் நிறைஞசுபோட்டுது. பன்னிரண்டு  ஒரு மணியாகியும் சூட்டு சத்தம் குறையிற மாதிரி இல்லை. இப்ப அண்ணாவும் அவற்ற friends உம் கோயில் திருவிழா  நேரம் அன்னதானத்துக்கு மடத்தில சமைக்கிற, அண்டா குண்டா எல்லாம் வெளியில எடுத்து, எல்லாற்ற  வீட்டையும் போய் அரிசி, தேங்காய் வாங்கி  கஞ்சி காச்ச தொடங்கிற்றினம். விடிய காலம படுக்கையல எழும்பி ஓடி வந்த சனம், ஒரு வாய் தேத்தண்ணி கூட குடிச்சிருக்க வாய்ப்பில்லை. எல்லாருக்கும் நல்ல பசி. கஞ்சியாவது கிடைக்கிதே எண்டு எதிர்பாத்து இருந்திச்சினம்.
     ஆனா காச்சின கஞ்சிய குடிக்கிறதுக்குள்ள, இந்தா நேவிக்காரன் ஊருக்க பக்கத்தில வந்திற்றான் எண்டு சேதி    பரவ, வந்த சனத்தோட நாங்களும் அகதியா கையில கிடைச்சதை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓட்டம் எடுத்தம். வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தையும் அள்ளி கொண்டு போனமாதிரி, நாங்களும் சனத்தோட சனமா அகதியா கிழக்கால வேலணைப் பக்கம்  போக   தொடங்கினம்.
      காச்சின கஞ்சி அவ்வளவும்   குடிக்க ஆளில்லாம அப்பிடியே கிடந்தது.

5 comments:

எஸ் சக்திவேல் said...

>ஊரில இருக்கிற சில பேருக்கு, காட்டுக்கு போய் கற்றோட்டமா காலை கடன் முடிச்சாத்தான் அண்டைய பொழுது விடிஞ்ச மாதிரி இருக்கும்.

"பலபேருக்கு" எண்டு உண்மையாச் சொன்னா என்ன?

எஸ் சக்திவேல் said...

எழுத்து நடை நல்லாயிருக்கு. தொடர்ந்து ஜமாயுங்கோ.

Rathnavel said...

நல்ல பதிவு.
வேதனையாக இருக்கிறது.

வலசு - வேலணை said...

அதே அனுபவம் எங்களுக்கும் உண்டு. நீங்க எந்த ஊர்?

கணேஷ் said...

நன்றி சக்திவேல், ரத்னவேல் ஐயா, வேலணை வலசு
எங்கட ஊர் புளியங்கூடல்