Monday, September 12, 2011

ஒரு அகதியின் டயரி - 2 சுடலை காவல்

  
 எங்கட நல்ல காலத்துக்கு அண்டைக்கு நேவிக்காரன், ஊர் எல்லை வரைக்கும் வந்திற்று திரும்பி போயிற்றான். ஊர் பக்கம் வரயில்லை. இரவு முழுக்க ஒரு கோயிலில படுத்திற்று அடுத்த நாள் விடிய காலம கொண்டு போன சாமான் எல்லாம் திருப்பி அள்ளி கட்டிக்கொண்டு வீட்ட வந்திற்றம். கொண்டு போன சாமானில முக்காவாசி அகதி வாழ்க்கைக்கு உதவாத சாமான்.   போட்டோ  ஆல்பம் , ஒரு சூட்கேஸ் நிறைய சாறி, அது இது எண்டு கிடந்ததை கொண்டு ஓடினதே தவிர எது எது தேவை எண்டு யோசிக்க இல்லை. ஆனா பிறகு இப்படி ஓடேக்க மறக்காமல் கொஞ்ச சட்டி பானை, அரிசி, தேங்காய் எண்டு எடுத்துக்கொண்டுதான் ஓடுறது. 
   நேவிக்காரன் வாறானோ இல்லையோ, அடிக்கடி வதந்தி பரவி சனம் ஓடுறது வழக்கமா போச்சு. இதை தடுக்க ஒரு நாள் வாசிக சாலையில கூட்டம் நடந்தது. நேவிக்காரன் அடிக்கடி சத்தம் இல்லாம கடற்கரை பக்கம் வந்திற்று போறான். ஊருக்க அவங்கள் வந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்க முதல் நாங்கள் வெளிக்கிட்டு போகவும் வேணும். அதுக்கு என்ன செய்யலாம் எண்டு ஒரு பெரிய மந்திரஆலோசனை நடந்தது. கடைசியா கடற்கரைக்கு பக்கத்தில இருக்கிற சுடலையடியில இரவில காவல் இருக்க வேணும், எதாவது அசுமாத்தம் இருந்தா ஓடி வந்து கோயில் மணியை அடிச்சு எல்லாரையும் உசார் படுத்த வேணும் எண்டு முடிவெடுக்க பட்டது. எல்லாம் சரி ஆனா பூனைக்கு யாரு மணி கட்டுறது. இரவில சுடலையில நிண்டு யாரு காவல் காக்கிறது ?
     ஆனா கனபேர் தாங்கள் வாறம் எண்டு கையை தூக்கிசினம். எல்லாரும் தூக்குகினம் எண்டு போட்டு நானும் ஓம் எண்டுட்டன். எல்லாரையும் குரூப் குரூப்பா பிரிச்சு எப்ப எப்ப காவல் இருக்க வேணும் எண்டு அட்டவணை   எல்லாம் போட்டாச்சு. எங்களுக்கு விழிப்பு குழு எண்டு ஒரு நல்ல பெயர் வேற சூட்டப்பட்டது.  ஒரு நாள் அமாவாசை கும்மிருட்டு நாளில எனக்கு duty வந்தது. அடிக்கவே கூடாது என்ற ஒடர் ஓட ஒரு torch லைட்உம் தரப்பட்டது. நாங்கள் மூண்டு பேர் சுடலைக்கு பக்கத்தில இருக்கிற பூவரச மரத்தடியில காவல் இருந்தம்.  ஓடேக்க சரியா ஊர் பக்கம் ஓட வேணும் எண்டதால,  நான் அடிக்கடி ஊர்பக்கம் திரும்பி திசையை சரி பார்த்துக்கொண்டு இருந்தன். கும்மிருட்டு, பக்கத்தில இருந்த ஆளை கூட சரியாய் தெரிய இல்லை. நேவிக்காரன் பக்கத்தில வந்து, ஊருக்க    எப்பிடி போறது எண்டு வழி கேக்கும் மட்டும் சத்தியமா அவங்கள் வாறது தெரிய போறதில்லை. எண்டாலும் ஒரு அசாத்திய துணிவோட காவலுக்கு நிண்டம்.
    இரவு ரெண்டு மணிபோல பனங்காய் பணியாரமும் தேத்தண்ணியும் வந்தது. அதையும் ஒரு பிடி பிடிச்சிற்று காவலை தொடர்ந்தம். விடிய காலமா நாலரை ஐந்து மணி இருக்கும். சாடையா விடிய தொடங்கிற்று. கடற்கரை பக்கமா ஏதோ நடமாட்டம். சின்னதா ஒரு லைட் வேற தெரிஞ்சுது.  நான் ஓட ரெடி. ஆனா கூட இருந்த ஆள், கொஞ்சம் பொறுங்கோ இன்னும் கிட்ட வரட்டும்  எண்டு சொல்ல நாங்கள் மரத்துக்கு பின்னால ஒளிச்சிருந்து பார்த்து கொண்டிருந்தம். கிட்ட வந்த உடன பார்த்தா , யாரோ ஒரு குடிகாரன்  தவறணையில கள்ளு அடிக்சு விழுந்து கிடந்திற்று விடிய வெறி முறிய, ஒரு பீடிஐயும் பத்த வைச்சுக்கொண்டு கடக்கரை ஓரமா நடந்து வந்து கொண்டு இருந்தார்.  நாங்கள் இருந்த பயத்தில அவருக்கு நல்ல ஏச்சு கொடுத்திற்று அன்றைய காவல் கடமையை முடிச்சுக்கொண்டு வீட்ட திரும்பினம்.

1 comment:

எஸ் சக்திவேல் said...

>நீங்கள் யாழ்ப்பாணத்தின் மேற்குப் பக்கம். நான் வளர்ந்தது யாழ் மாவட்டத்தின் கிழக்குக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில். ஆனால் 1986 இலிருந்து "ஆமி வாரான்"எண்டு அடிக்கடி ஓடியதுதான் ஞாபகத்தில் இருக்கு. இதில் யாரோ ஒரு பேர்வழி பரப்பிவிட்ட தத்துவத்தால் எல்லோரின் பையிலும் ஒரு போட்டோ அல்பம் இருக்கும். காரணம், "மிகுதி எல்லாப் பொருட்களையும் உழைத்து மீளப் பெறலாம். ஆனால் போட்டோக்களை (பழையவை) திருப்பி எடுக்கமுடியாது"