Friday, July 11, 2008

Hair Cut

தலைமயிர் வெட்டுறது எண்டா எனக்கு சின்னனில இருந்தே ஒரு பயம். சின்னனில barber வீட்ட வந்து பின்வளவுக்க இருக்கிற பூவரச மரத்துக்கு கீழ ஒரு கதிரைஐ போட்டு அங்க வைச்சுத்தான் தலைமயிர் வெட்டுவார். barberஐ கண்டவுடனேயே பயத்தில கத்த தொடங்கீருவன். அப்பாவும் மாமாவும் நான் கத்த கத்த தூக்கிக்கொண்டுபோய் கதிரையில இருத்துவினம். barberரும் சும்மா வெட்டதொடங்க மாட்டார். சவரக்கத்திஐ எடுத்து ஒரு தோல்பட்டியில தீட்டி, சும்மாவே கத்திக்கொண்டு இருந்த என்னை வீல் வீல் எண்டு கத்தவைப்பார். barber கத்தி தீட்டுறதையும், அப்பாவும் மாமாவும் அமத்தி பிடிக்கிறதையும் நான் இருக்கிற விதத்தையும் பார்த்தா, கிடாய் ஆடு அறுக்கிறதுதான் ஞாபகத்திற்கு வரும். பிறகு பெரிசா வளர்ந்த பிறகும், இது என்ன சடை எண்டு எல்லாரும் ஏசும் மட்டும் சலூன் பக்கம் போறதில்லை. போனாலும் அப்படி வெட்டுங்கோ, இப்படி வெட்டுங்கோ எண்டு கண்டிஷன் ஒண்டும் போடுறதில்லை. கையில கத்தியோட சுத்தி சுத்தி வாற ஆளிட்ட எப்படி கண்டிஷன் போடுறது. barber கழுத்தை சுற்றி துணியை இறுக்கி கட்டிபோட்டு எப்படி வெட்டுறது என்று பார்வையாலே கேள்வி கேட்பார். நானும் shortஆ வெட்டுங்கோ எண்டு சொல்லிப்போட்டு சிவனே எண்டு இருந்திருவன். அவரும் தலையை அந்தபக்கம் இந்தபக்கம் இழுத்து, பிடரியில நாலு அடி அடித்து, ஒருமாதிரியா மயிரை வெட்டி முடிச்சு, பவுடர் அடிக்கும் வரைக்கும் ஒரு சொல்லும் கதைக்கமாட்டன்.

அது இந்தியன் ஆமியும் ஈபிடிபி ஒண்டா திரிந்த காலம். கண்ட கண்ட இடமெல்லாம் சுற்றி வளைச்சு பெடியளை பிடிக்கிற நேரம். நான் சந்தியில தலைமயிர் வெட்டிக்கொண்டு இருந்தனான். தலைமயிர் வெட்டிற barber அன்ரனுக்கு என்னை விட ரெண்டு வயதுதான் கூட இருக்கும். எங்கட கஸ்ரகாலம், இந்தியன் ஆமியும் ஈபிடிபியும் வந்து, சந்தியை சுத்தி வளைச்சு, ஒவ்வொரு கடை கடையா போய், நிண்ட எல்லா பெடியளையும் நடுசந்தியில இருக்க வைச்சினம். சலூனுக்கையும் ஒரு சீக்கியன் வந்தான். "barber salon.. OK carry ON" எண்டு சொல்லிபோட்டு கண்ணாடியை பார்த்து மீசையை முறுக்கிப்போட்டு திரும்பி போயிற்றான். இப்ப எனக்கும் அன்ரனுக்கும் என்ன செய்யுறது வெளியில போய் எல்லாரோடும் இருக்கிறதா அல்லது தொடர்ந்து வெட்டுறதா எண்டு குழப்பம். கடைசியில ஆமிக்காறனே சொல்லிபோட்டான், தொடர்ந்து வெட்டுவம் எண்டு தீர்மானிச்சு, சலூனூக்கையே ரெண்டு பேரும் இருந்திற்றம். கொஞ்ச நேரத்தில ஒரு ஈபிக்காரன் கத்திக்கொண்டு உள்ள வந்தான். துவக்கின்ர பின்பக்கத்தை திருப்பி ஒரு ஓங்கி அடிச்சான். ஆனா நான் ராஜீவ்காந்தி தப்பினமாதிரி குனிஞ்சு தப்பி வெளியால ஓடி, கூட்டத்தோட கூட்டமா நடுசந்தியில போய் இருந்திற்றன். ஆனா பாவம் அன்ரன்தான் என்ர அடியையும் சேர்த்து வாங்கீற்றார். பிறகு தலையாட்டி வந்து, செக்பண்ணி முடிஞ்சு வீட்ட போய்ச்சேர இரவாகீற்றுது. அம்மா கேட்டா, இது என்ன புது ஸ்ரைல பின்னால துணி கட்டியிருக்கிறாய் எண்டு. அப்பதான் பார்த்தன், சலூனில அன்ரன் கழுத்தில கட்டின துணி இன்னும் அவுக்கவே இல்லை.

அப்பிடி ஆமிகாரனிட்டயே தப்பிவந்த நான், ஒருநாள் குடும்ப சண்டைக்கு நடுவில நல்லா மாட்டுபட்டு போனன். கம்பஸில படிக்கேக்க ஹொஸ்ரலுக்கு பின்னால இருக்கிற பெட்டிக்கடையிலதான் வழமையா தலைமயிர் வெட்டுறனான். பத்து ரூபா காசுக்கு சுமாரா வெட்டிபோடலாம். பெட்டிகடையோட இருந்த கொட்டிலிலதான் barber இன்ர குடும்பமும் இருந்தது. அண்டைக்கு நானும் ஜெனுவும் தலைமயிர் வெட்ட போயிருந்தம். கழுத்தில துணி கட்டி எனக்கு barber தலைமயிர் வெட்டதொடங்கீற்றார். முதல்ல உள்ளுக்குள்ள இருந்து புறுபுறுத்துக்கொண்டிருந்த barber இன்ர மனுசி, கொஞ்சம் கொஞ்சமா சத்தத்தை கூட்டி உச்சதொனியில barberஐ ஏசத்தொடங்கீற்றா. முதல்ல சும்மா இருந்த barberரும் இப்ப இடைகிடை திருப்பி ஏசதொடங்கீற்ரார். ஆனா, வெட்டுறத நிப்பாட்டவேல்லை. barberருக்கு கோபம் கூட கூட வெட்டிற வேகமும் கூடிக்கொண்டு போச்சு. ஒரு கட்டத்தில, barber இண்ட கண் மனுசி நிண்ட பக்கம் பார்க்கிது, வாய் தாறுமாறா ஏசுது. கையில இருந்த கத்திரிக்கோல என்ர தலையில பூந்து விளையாடுது. என்னடா இப்பிடி வந்து மாட்டுபட்டுட்டன். வெட்டுறத நிப்பாட்டுங்கோ எண்டு சொல்லவும் பயமாகிடந்தது. மனுசியில இருக்கிற ஆத்திரத்தில என்னில பாய்ந்தால் என்ன் செய்யிறது. கையில வேற கத்தரிக்கோல். ஏதோ நடக்கிறது நடக்கட்டும் எண்டு பேசாம இருந்திற்றன். இப்ப barber கோபமா உள்ளுக்க போனார். தடால் தடால் எண்டு சட்டி பானைச்சத்தம், அடி வாங்கினாரோ போட்டாரோ தெரியேல்ல, வரேக்க கொஞ்சம் கோபம் குறைந்திருந்தது, வந்து என்ர தலையில மீண்டும் வேலையை தொடங்கிற்றார். ஆனா மனுசி விடுறதா இல்லை, கத்திக்கொண்டு சலூனுக்கையே வந்திற்றா. இனியும் இருந்தா என்ர தலை தப்பாது. Barber கொஞ்சம் அசந்த நேரம் பாத்து, சடாரெண்டு குதித்து, துணியை அவிட்டு போட்டு, பத்து ரூபா தாளை நீட்டி thank you சொல்லீற்று, இவ்வளவு நேரமும் ஆ எண்டு விடுப்பு பார்த்துக்கொண்டு இருந்த ஜெனுவையும் இழுத்துக்கொண்டு வெளியில வந்திற்றன்.

முன் பக்கம் தலையை தடவி பார்த்திற்று ஜெனுவிட்ட "என்ன மச்சான் இப்படி கோதி போட்டான்" எண்டன். அதுக்கு ஜெனு "முன்பக்கத்தை நினைச்சு கவலைபடாதை மச்சான் எனெண்டா பின்பக்கம் அதவிட மோசம்".எண்டான். பிறகு bus ஏறி கண்டிக்கு போய், இன்னொரு சலூனில தலையை shape பண்ணிற்று வந்தம். ஒரே நாள்ல ரெண்டு சலூனில ரெண்டு தரம் தலைமயிர் வெட்டின ஒரே ஆள் நானாத்தான் இருப்பன்.

2 comments:

Rizme & Ruzna said...

Hi Ganesh,

You just managed to take me on the memory lane and made me feel what a wonderful life we all had. I am just wondering what happened to all the good times, are we just absorbed into the rat race? Will our children have such stories to tell? I wonder.
You also gave me an opportunity to read Tamil and realize what a wonderful language it is with all it’s expressions. I wish I am able to write this comment in Tamil, so that it will add all the colours which we just can’t express in English. You did show us what a wonderful hidden talent you have with writing, fantastic! You could even beat Vivek if you also start acting.
Just one request. Can you please put a recently taken photograph of yours in the Blog!

Well done and keep it up.


Rizme

Kumar said...

கனேசு..பட்டிப்பொலவில ரோட்டுப் போட்டதைவிட நல்லா இருக்கிது

நுவரெலிய இருந்த நாலில இருத்தனாய் ஜெயக்குமார்