Saturday, October 8, 2011

ஒரு அகதியின் டயரி - 4 அமைதி படை


நம்ம ஊர் ஆட்கள் சிலபேருக்கு   ஊரை பற்றியோ தீவை பற்றியோ குறையா கதைச்சா கோபம் பத்திக்கொண்டு வந்திரும்.  கஷ்டபட்டு உழைக்கிறதால உடம்பில உரமேறின ஆட்கள் அவையள்.  கையால ஒண்டு விட்டினமேண்டா சாகும் மட்டும் மறக்க ஏலாது.  யாழ்ப்பாணமே ஒரு சின்ன இடம்தான். அதுக்குள்ளே ஊருரா பிரிச்சு தங்கட ஊர் பெருசு. உங்கட குறைவு எண்டு கதைக்கிறவையும் கனபேர் இருந்திச்சினம்.  யாழ்ப்பணம் போற நேரத்தில,  சிலபேர் தீவை பற்றி குறைவா கதைச்சு என்ர தத்தாட்டையும் அடி வாங்கியிருக்கினம்.  யாழ்ப்பாண பள்ளிகூடத்தில என்ர முதல் நாள். பக்கத்தில இருந்தவன் எந்த ஊரென்று கேட்டான்.  நான் ஊரின்ர பெயர சொல்ல " ஐயோ இன்னொரு தீவானா. எப்பிடி பக்கத்தில வைச்சு சமாளிக்க போறேனோ தெரியேல்ல " எண்டான்.  எனக்கும் தாத்தான்ர  gene தானே.  வந்த ஆத்திரத்துக்கு ஒண்டு குடுக்கவேணும் மாதிரித்தான் இருந்தது.  ஏதோ என்னால முடிஞ்சது. மனதளவில நாலு சாத்து சாத்திற்று சும்மா இருந்திட்டன். 

  தலைவலி போய் திருகுவலி வந்த மாதிரி,  இந்திய  "அமைதி படை" வந்தும் நாங்க ஓடுறது நிக்கேல்ல.  ஆனா இந்தமுறை வித்தியாசமா எங்கட ஊர் பக்கம் சனம் அகதியா வர தொடங்கிற்றினம்.  யாழப்பாணத்தை பிடிக்க இந்திய இராணுவம் நடத்தின முதல் சண்டை. அவையின்ர உண்மையான முகம் அண்டைக்குத்தான் தெரிய தொடங்கிச்சு. அமைதிப்படைதானே எண்டு சண்டை நடக்கேக்க, வெளிக்கிட்டு ஓடாமல், வீட்ட இருந்த ஆட்கள் குடும்பத்தோட  கொல்லபட்டினர். இதைவிட  யாழ் வைத்தியசாலை படுகொலை, அராலி துறை படகு தாக்குதல் எண்டு சனம் கும்பல் கும்பலா செத்துபோச்சு. 
     
ஊருக்க சனபுழக்கம் கூடின படியால சாப்பாட்டு சாமானுக்கும் தட்டுபாடு வந்திற்று. கடையளிலஇதுவரைக்கும் விக்காமல் இருந்த உழுத்துப்போன அரிசி, புழு பிடிச்ச மா எல்லாமே வித்து தீர்ந்திற்று. சனம் கையில பையோட அரிசி வாங்க சந்தி சந்தியா அலைஞ்சு திரிஞ்சினம். இடைக்கிட  சைக்கிள்காரர் கொண்டுவாற அரிசி மூட்டையும்  ஒரு நிமிசத்தில வித்து தீந்திரும்.  


அப்பத்தான் பார்த்தான், என்ர பள்ளிகூடத்து பக்கத்து சீற் காரனும் பையோட நிண்டான். "என்ன இந்த பக்கம்" எண்டன் .  அரிசி வாங்க வந்தனான். தன்ர  தாத்தாவின்ர ஊரும் வேலணைதான் எண்டான்.  ஒரு நமட்டு சிரிப்போட, சரி வா மச்சான் எண்டு ரெண்டுபேருமா  சேர்ந்து அரிசி வாங்க அலைய தொடங்கினம்.

  இந்த   அகதி வாழ்க்கையில   பிரதேசவாதமும் சாதி வெறியும் குறைஞ்சு போனது என்னவோ உண்மைதான்.

4 comments:

Anonymous said...

அந்த ஞாபகங்கள் இலகுவில் மறந்து விடக்கூடியதல்ல,அன்றைய மரண ஓலங்கள்
இன்றும் காதில் ஒலிப்பதுபோல் இருக்கிறது.இந்திய காடைப்படையின் கொலை வெறிக்கு நண்பன்
ரவியையும்(அப்ஸ்)இழந்தோம்!யாழ்ப்பாணத்தில் இந்தியப்படையின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்ட
தமது குழந்தையை பிரேதப்பெட்டி கிடைக்காததால் சைக்கிள் கரியலில் வைத்து இளம் தாயும் தந்தையும்
குளறியபடியே கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டிருக்கிறேன்.
இன்னும்தான் அந்த ஓலங்கள் நிற்கவில்லை!எப்போதான் எமக்கு விடியல் என்ற ஏக்கம்தான்
எஞ்சி நிற்கிறது.

எஸ் சக்திவேல் said...

மேலேயுள்ள புகைப்படம் ஆயிரம் கதைகள் சொல்லுது.

>தலைவலி போய் திருகுவலி வந்த மாதிரி, இந்திய "அமைதி படை" வந்தும் நாங்க ஓடுறது நிக்கேல்ல. ஆனா இந்தமுறை வித்தியாசமா எங்கட ஊர் பக்கம் சனம் அகதியா வர தொடங்கிற்றினம்

எங்கடை ஊரிலும் இதே கதைதான்.

Anonymous said...

இந்திய காடைப்படையின் கொலை வெறிக்கு ஒரு தம்பதிகளின் இரு புதல்வர்களும் (சிறுவர்கள்) பலியானது எனக்குத் தெரியும். அப்ப அந்தத் தந்தைக்கு 35 வயதுதான் இருக்கும். அதுக்குப் பிறகு மனிசனைக் காணவே எங்களுக்குக் நெஞ்சு வலிக்கும். அவ்வளவு சோகமாக இருப்பார். அவரின் மனைவியை வெளியே காணமுடிவதில்லை. அந்தத் தம்பதிகளின் சோகத்தைக் கற்பனை பண்ணக்கூட முடியவில்லை.

அந்தக்காலம் said...

நன்றி .
தீவு பகுதியில் சண்டை எதுவும் நடக்காத போதும், பாதை தவறிய அமைதி படையை கிறிஸ்தவ பாதிரியார் மூலம் மீண்டும் முகாமுக்கு வழி அனுப்பி வைத்து அமைதி காத்தபோதும் நண்பன் ரவிஐ படுகொலை செய்து தாங்கள் IPKF (Indian people killing forces) எண்டு நிருபித்ததோடு தீவு பருத்தியில் ஆரம்பித்தது அமைதி படையின் அட்டகாசம்.