Thursday, October 20, 2011

ஒரு அகதியின் டயரி - 6 The great escape



ஊருக்க பிள்ளை பிடிகாரரிட்ட பிடிபட்ட பெடியள்ள என்ட நண்பன் கரனும் ஒருவன். கரன் எவ்வளவு  பிரச்சினை எண்டாலும், விடிய காலம வந்து சந்தியில இருக்கிற தன்ர கடையை திறந்திருவான். அதுக்கு முக்கிய காரணம், சந்திக்கு பக்கத்தில்தான் அவன்ர அன்புக்குரியவளின்ர வீடும் இருக்கு. ஊர் முழுக்க பிள்ளை பிடிகாரர் தொல்லை எண்டாலும், கடைக்காரனை பிடிக்க மாட்டாங்கள் என்ற ஒரு நம்பிக்கை வேற.  வழக்கம் போல அண்டைக்கும் விடிய காலம வந்து கடைக்கதவைத் திறந்தாச்சு. ஆனா பத்து மணிபோல, வானில வந்த பிள்ளை பிடிகூட்டம் என்ன சொன்னாலும் கேளாமல் கடைக்க நிண்ட கரனை இழுத்து வானுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். முகாம் முகாம ஏறி இறங்கி விசாரிச்சும் ஒரு பிரயோசனமும் இல்லை. அங்கை இங்கை எண்டு மாற்றி  மாற்றி வைத்திருந்து கடைசியா கொண்டுபோய் பயிற்சி  முகாமில விட்டுட்டாங்கள்.

    இப்பதான் கொஞ்சநாளாதான் life interesting  போய் கொண்டிருந்தது. அதுக்குள்ள எல்லாமே  தலை கீழா மாறிப்போச்சு. இயலாமை, வெறுப்பு எல்லாம் சேர்ந்து ஆத்திரம் ஆத்திரமா வந்தாலும், கட்டுப்படுத்திக்கொண்டு  சும்மா இருந்தான். ஆத்திரபட்டு, வாக்குவாதப்பட்ட கனபேர், எழும்ப ஏலாத அளவுக்கு அடி வாங்கி மூலையில கிடந்தினம். அடி வாங்கிறதை விட, இப்போதைக்கு அவங்கட போக்கில போறதுதான் புத்தி எண்டு கரன் பொறுமையா இருந்தான். பிடிபட்ட எல்லா பெடியளையும் ஒரு பெரிய ground  இல வரிசையா நிப்பாட்டி, ஒருத்தர் பெரிய lecture  அடிச்சுக்கொண்டு இருந்தார். எதிரியை எப்படி தாக்கிறது, எதிரியை எப்படி பிடிக்கிறது எண்டு சொல்லி தருவம். அது இது எண்டு கனக்க கதைச்சுக்கொண்டு போனார். "எதிரி எதிரி எண்டுறீங்க, யாருங்கோ அந்த எதிரி" எண்டு கேக்க வேணும் போல இருந்தது. ஆனா எதுக்கு வம்பு எண்டு பேசாம இருந்திற்றான்.

   பயிற்சி சரியான கடுமையா இருந்தது. ஓடுறது. தாவுறது, தவழுறது எண்டு நாள் முழுக்க துரத்திக்கொண்டு இருந்தாங்கள். பின்னால வாறவங்களுக்கும் , முரண்டு பிடிக்கிறவங்களுக்கும்  அடி விழுகிறதால கஷ்ரபட்டு பயிற்சியை செய்துகொண்டு இருந்தான். பயிற்சி முகாமில கனக்க ஊர் பெடியள் இருந்தாலும் ஒருத்தரோடும் கதைக்க பிடிக்கேல்ல. எப்பிடி இந்த நரகத்தை விட்டு தப்பி போறது எண்டு யோசனையிலேயே காலம் கழிந்தது. பயிற்சி நேரம் ஒத்துழைத்த படியால சுதந்திரமா வெளியில உலாவ கூடியதா இருந்தது. முகாமிட அமைப்பு, காவல் எல்லாம் அவதானிக்க கூடியதா இருந்திது.
 ஒரு நாள் நடுநிசி வேளை, எல்லாரும் அயர்ந்து தூங்கிற நேரம், கரன் முள்ளு கம்பிகளுக்கு கீழால தவண்டு, வேலிகளுக்கு மேலால தாவி, பற்றை காட்டுக்குள்ளால ஓடினான். சும்மா செல்ல கூடாது. எடுத்த பயிற்சி நல்ல உதவி செய்தது. ஓடி ஓடி விடியிற நேரம் மெயின் ரோடுக்கு வந்திற்றான். விடிய காலமா வந்த ரவுண் பஸ்சை பிடிச்சி ஒருமாதிரி அந்த நரகத்தில இருந்து தப்பினான். ஊரை விட்டு போக மனம் இல்லாட்டியும், அண்டைக்கு ஓட வெளிக்கிட்டவன்தான் ஓடி ஓடி கடைசியா கனடாவில்தான் போய்தான் அந்த ஓட்டம் நிண்டுது.

2 comments:

எஸ் சக்திவேல் said...

சுதன் என்பது நீங்களா? அல்லது ஒரு படிமமா?

Ravies Pasupathy said...

அப்ப இவங்கள்(நீங்கள் சொல்லும் பாணியில் பிள்ளைபிடிகாரர்)நல்ல விஷயமும்
செய்திருக்கிறாங்கள் என்று சொல்லுங்க!
கரனை கனடாவிற்கு அனுப்பியவங்களாச்சே!