Tuesday, October 25, 2011

ஒரு அகதியின் டயரி - 7 - JVP காலம்

என்னைபோல பிள்ளை பிடிக்கு தப்பி, கொழும்புக்கு ஓடின பெடியளுக்கு, கண்டி, காலி, கொழும்பில இருக்கிற தமிழ் கடையள்தான் வேடந்தாங்கல். படுக்கை, சாப்பாடு எல்லாம் free . அதோட கடையில நிக்கிறதால, கை செலவுக்கும் காசு கிடைக்கும்.   நான் தங்கினது வெங்காயம், மிளகாய், அரிசி, கருவாடு எல்லாம் கொழும்பில இருந்து இறக்கி, சில்லறை வியாபாரிகளுக்கு விக்கிற ஒரு பலசரக்கு கடையில.  ஞாயிற்று கிழமை லீவு. அண்டைக்கு  நாங்க, காலி கோட்டை, கடற்கரை, கோயில் எண்டு சுத்தி திரிவம். எவ்வளவுதான் குளிச்சு வடிவா வெளிக்கிட்டாலும், கடை கருவாட்டு மணம் கூடவே வாறதால, சிங்கள பெட்டையள் ஒருத்தரும் திரும்பியும் பார்க்க மாட்டாளவ. கையில கொஞ்சம் காசு கூடிச்செண்டால்  வெளிக்கிட்டு கொழும்புக்கு போய் ரெண்டு படமும் பார்த்து கிடந்த காசெல்லாம் சிலவழிச்சு முடிய திரும்பி கடைக்கு வருவம்.
   அது JVP பிரச்சினையின்ற  உச்சகட்ட நேரம். வேலியில நிண்ட ஓணானை பிடிச்சு  பாக்கெட்டுக்க விட்ட மாதிரி, இந்தியன்  ஆமி வந்த பிறகு,  வடக்கு கிழக்கில அட்டகாசம் பண்ணி திரிந்த அதிரடி படையை  (STF) ஊருக்க அனுப்ப,  அவங்கள் தங்கட ஊருக்குள்ளேயே பெடியளை கொன்று குவித்த நேரம் அது.  கொழும்புக்கு போகேக்க கழுத்துறை ஆற்றம்கரையில அரைவாசி எரிஞ்ச சடலமெல்லாம் நான் பார்த்திருக்கிறன்.  

  நான் காலிக்கு  வந்த கொஞ்ச நாளில,  கரனும் பயிற்சி முகாமில இருந்து தப்பி ஓடி கடைக்கு வந்திற்றான். கரன் ஊரிலேயே கடை வைச்சிருந்தவன். எண்டாலும் பிசினஸில அவ்வளவு அக்கறை  இல்லை. அங்க இங்க காசு பிரட்டி வெளிநாட்டுக்கு போக ட்ரை பண்ணிக்கொண்டு திரிஞ்சான்.  நான் எப்படா இந்தியன் ஆமி போகும், எப்ப வீட்ட திரும்பி போறது எண்ட நினைப்பில இருந்தன்.
 வெளிநாட்டுக்கு போறதில பெரிய பிரச்சினை ஒரு நம்பிக்கையான ஒரு நல்ல ஏஜண்டை பிடிக்கிறதுதான். ஒரு ஏஜெண்ட்க்கு பத்து துணை எஜண்ட். அவைக்கு பத்து பேர் எண்டு ஏஜெண்ட் வேலை செய்யிறவ கனபேர்.
ஆளாளுக்க கமிசன் எடுக்க வெளிநாட்டுக்கு போற rate எகிறீரும்.
அதோட ஊரில உள்ள சுத்துமாத்து காரரெல்லாம் ஏஜெண்ட் எண்டு  சொல்லிக்கொண்டு திரியிறதால நம்பிக்கையான ஆளை பிடிக்கிறது கஸ்ரம்.
 அங்க இங்க விசாரிச்சு  கடைசியா வெள்ளவத்தையில இருக்கிற ஒரு lodge  சுல இருந்த  ஒரு ஏஜெண்ட சந்திக்க நானும் காரனோட போனன்.  அவருக்கு பெயரே "எஜின்சி கணேசு" தான்.  அவரும் வலு பந்தாவாதான் இருந்தார்.

இப்பதான் பத்துபேரை கனடாவுக்கு அனுப்பிபோட்டு வாறன் அது இது எண்டு அளந்துபோட்டு,

"நீங்க எங்க போகவேணும்" எண்டார்.

கரன் வெளிநாட்டுக்கு போக வேணும் எண்டு  யோசிச்சானே  தவிர  எங்க போறது எண்டு யோசிக்கேல்ல.


"கனடா, லண்டன், ஜெர்மனி எங்க எண்டாலும் பரவாயில்லை. கெதியா போக கூடிய நாட்டுக்கு அனுப்புங்கோ"

"அடுத்த கிழமை பேங்க்கொக் கில இருந்து லண்டனுக்கு ஒரு batch போகுது. நாளைக்கே காசை கொண்டந்து கட்டினா அவையோட உங்களையும் அனுப்பி விடுறன் "

"எவ்வளவு காசு அண்ணை"

" வெளியில பத்து போகுது. நீங்க என்னட்ட நேர வந்தபடியால ஒம்பது  கொண்டுவந்து கட்டினா போதும் "

"ஒம்பது லட்சமா? கொஞ்சம் குறைக்கேலாதா ? இப்பதான் பயிற்சி முகாமில தப்பி வந்தனான்"

" தம்பி ஏலுமான அளவு குறைச்சாச்சு. உங்க கனபேர் காசோட ரெடியா நிக்கினம். கெதியா கொண்டந்து கட்டினா அடுத்த கிழமையே லண்டன் போகலாம்"

வெளியில வந்த உடன நான் " ஒன்பது லட்சத்துக்கு எங்கடா போறது. உவனை பார்த்தா  சுத்தல்காரன் மாதிரி இருக்கிறான்" எண்டன்.

  ஆனா கரன், கனடா மாமா, லண்டன் சித்தப்பா, அவுஸ்திரேலியா அன்ரி எண்டு எல்லாரோடையும்  போன்ல கதைச்சு, இன்டர்நேஷனல் லெவலில கடன் வாங்கி ரெண்டு மூண்டு நாளில ஒம்பது லட்சம் சேர்த்திற்றான்.

 ஒம்பது லட்சத்தையும் ஆயிரம் ரூபா நோட்டா மாத்தி கட்டு கட்டா கட்டி, ஒரு பையில போட்டுக்கொண்டு, ரெண்டு பேரும் விடிய காலமா காலியில இருந்து கொழும்புக்கு பஸ் ஏறினம்.     
  பஸ் ஹிக்கடுவயை தாண்டேல்ல.   நடுவழியில அதிரடி படை செக்கிங் எண்டு மறிச்சு போட்டாங்கள். ஒம்பது லட்சத்தோட ரெண்டு பேரையும் பிடிச்சான் எண்டால், காசும் போய் ரெண்டு பேரும் ஆத்தில பிணமா மிதக்க வேண்டியதுதான்.
  ஆனா பஸ் வாசலில நிண்ட ஆமிக்காரன், ஐடென்ட்டி கார்டை பாத்திற்று,

தேமலதா? வகிண்டோன்ன ( தமிழனா ? இறங்க வேண்டாம் ) எண்டான்

அண்டைக்குத்தான் முதன் முதலா தமிழனா பிறந்ததுக்கு சந்தோஷபட்டன்.          
     









2 comments:

எஸ் சக்திவேல் said...

>எவ்வளவுதான் குளிச்சு வடிவா வெளிக்கிட்டாலும், கடை கருவாட்டு மணம் கூடவே வாறதால, சிங்கள பெட்டையள் ஒருத்தரும் திரும்பியும் பார்க்க மாட்டாளவ

ம்ம்ம், வீட்டுக்காரம்மா இதை வாசிக்கமாட்டாவா? ஒரு மாசத்துக்கு கறி/புளியில உப்புப்புளி சரியாக இருக்காது பாருங்கோ...

Rathnavel Natarajan said...

வேதனையாக இருக்கிறது.