Saturday, September 24, 2011

ஒரு அகதியின் டயரி - 3 -Crossfire


இப்ப எப்பிடியோ தெரியாது. அப்ப ஊரில இருந்து யாழ்ப்பாணம் போய் படிக்கிறது எண்டது ஒரு ஸ்டைல். யாழ்ப்பாணத்தில இருக்கிற பள்ளி கூடத்தில  சேர்ந்து படிக்க வேணும். அது சரிவரேல்ல எண்டால், டியூஷனுக்காவது டவுனுக்கு போய் வர வேணும். அதுதான் ஊருக்க கன பெடியளின்ர ஆசை. அங்க போய் படிக்கிறமோ இல்லையோ,  ஊருக்க செய்ய ஏலத சேஷ்டையள் எல்லாம்  ஊர் விட்டு ஊர் வந்து டவுனுக்கதான் செய்யலாம்.   O/ L  மட்டும் ஊரிலேயே படிச்ச எனக்கும்   ரிசல்ட் வந்த உடன டவுணுக்க படிக்கிற ஆசை வந்திற்று. நானும் யாழ்ப்பாண பள்ளிகூடங்களுக்கு application  போட்டு, அனுமதி பரீட்சைக்கு கடிதமும்  வந்திருந்தது.

அப்ப தீவுபகுதி சனத்துக்கு போக்குவரத்துதான் பெரிய பிரச்சினையா இருந்தது. இங்க இருந்து யாழ்ப்பாணம் போறதெண்டால்  ஊர்காவல்துறை - காரைநகர் ferry (படகு) இல ஏறி போகவேணும் அல்லது யாழ் கோட்டைக்கு பக்கத்தில இருக்கிற பண்ணை பாலத்தாலதான்  போகவேணும். ஆனா ரெண்டுமே பிரச்சினையான பாதைதான்.  நேவிக்கரனின்ர கெடுபிடி தாங்கேலாமல் படகு சேவை முற்றாக நிப்பாட்டியாச்சு.   பண்ணை பலத்தால போற எண்டாலும் உயிரை கையில பிடிச்சுக்கொண்டுதான் போக வேண்டியிருந்தது.  ஒரு    பக்கம்   இயக்கங்களின் சென்றி பொயின்ற்   , மற்ற பக்கம் கோட்டை சுவர்.  நடுவில பண்ணை ரோடு. ஆமிகாரர் வெளியில  வர ஏலாட்டியும், அப்பப்ப பண்ணை ரோட்டால போற  வாகனங்களை சுட்டு தங்கடை வீரத்தை கட்டிக்கொண்டு இருந்தாங்கள்.

    அண்டைக்கு எனக்கு யாழ்ப்பணத்தில  இல அனுமதி பரீட்சை. விடிய வெளிக்கிட்டு பஸ் ஏறுறதுக்கு சந்தியில போய் பாக்கிறன். கடையெல்லாம் பூட்டு.  சந்தியில நிண்ட ஒராள், "டெலோவும்  புலியளும் சண்டை பிடிக்க வெளிக்கிட்டுடான்கள்.  இனி பஸ்சும் ஓடாது . இங்கினேக்க நிண்டு விடுப்பு பார்க்காமல் கெதியா வீட்ட போங்கோ "  எண்டார்.  எனக்கு எக்ஸாமை விட்டிற்று   வீட்ட போகவும் மனமில்லை.கொஞ்சநேரம்  நிண்டு பார்த்தான். சண்டை நடக்கிறமாதிரி ஒண்டும் தெரியேல்ல.  சரி பக்கத்து ஊர் வேலணைக்கு  போய் அங்க இருந்து பஸ் எடுப்பம் எண்டிற்று சைக்கிளில வேலணை  வங்களாவடி சந்திக்கு போனான். 
      வங்களாவடி சந்தியை நெருங்கேக்க பின்னால மோட்டர் சைக்கிளில வந்தவங்கள் சுட தொடங்கிற்றாங்கள். சந்தியில இருந்தும் சுடுறாங்கள் . நடுவில நான். நான் சைக்கிளை போட்டிற்று விழுந்து படுத்திற்ரன். கொஞ்ச நேரம் ஒரே வெடிச்சத்தம். புழுதி மணமும் வெடி மருந்து மணமும் சேர்ந்து அடிச்சிது.  அவ்வளவு ரவுன்சையும், குண்டுகளையும் காரைநகர் நேவி கேம்ப்க்கு  அடிச்சிருந்தா கேம்ப்பையே பிடிச்சிருக்கலாம்.

கொஞ்ச நேரத்தில சத்தம் நிண்ட உடனே நிமிர்ந்து பார்த்தன். ரோட்டுக்கு மற்ற பக்கத்தில கரண்ட கம்பி (11000V) அறுந்து வேலிக்கு  மேல விழுந்து வேலி எரிஞ்சு கொண்டிருந்தது. மெல்லமா சைக்கிள வேலிக்கு மேலால தூக்கி போட்டுடு வேலியை பாஞ்சு, சைக்கிளையும்  தூக்கிக்கொண்டு ஓட தொடங்கிட்டன்.  ஓடி ஓடி அராலி துறை சந்திக்கு வந்திட்டன். புங்குடுதீவு, வேலணை, ஊர்காவல்துறை இல இருந்து யாழ்ப்பாணம் போற எல்லா பஸ்சும் அராலி சந்தி தாண்டித்தான் போகவேணும்.  ஆனா பஸ் ஒண்டையும் காணேல்ல. பாதி தூரம் வந்தாச்சு. சரி திரும்பி வீட்ட போவமா எண்டு யோசிச்சுக்கொண்டு நிக்கேக்க, சைக்கிள்ள வந்த இன்னொரு ஆள், நானும் யாழ்ப்பாணம்தான் போறான். வரும் ரெண்டுபோரும்  ஒண்டா போவம் எண்டு சொல்ல நானும் ஓம் எண்டு வெளிக்கிட்டுடன். 
  
      கோட்டைக்கு கிட்ட போகேக்க கை கால் எல்லாம் நடுங்க தொடங்கிற்று. ரோட்டில எங்களை தவிர வேற ஒருத்தரும் இல்லை. ரோட்டில இருந்து  கோட்டை சுவர் ஐம்பது மீட்டர் தூரம்தான் இருக்கும். இந்த நேரம் பார்த்து என்ர சைக்கிளுக்கு காத்து வேற போச்சுது. மகாபரதத்தில கர்ணன் சாக முதல் , தேர் சில்லு நிலத்தில புதைந்துதாம். அது மாதிரி என்ர சைக்கிளும் கடைசிநேரத்தில கை விட்டிற்று. அந்த அசுமாத்தத்தை பார்த்திற்று ஆமிக்காரன் சுட்டிருவானோ எண்டு பயமா இருந்தாலும், உள்ள எல்லா கடவுளுகளையும் கும்பிட்டுக்கொண்டு  ரெண்டு பேரும் மெல்ல மெல்லமா கோட்டையை தாண்டி டவுணுக்க போயிற்றம். 
    டவுணுக்க வந்த உடன கூட  வந்தவர் சொன்னார்.  " இவங்கள் தங்களுக்க அடிபட்டு சாகிறாங்கள். தாங்கள்  ஏன் ரவுன்சை வேஸ்டாக்க வேணும் எண்டு ஆமிக்காரன் சும்மா இருந்திற்றான் போல " எண்டார். 
  
 அந்த ஆள் சென்னது எவ்வளவு உண்மை எண்டு ஊருக்கு திரும்பி வந்த பிறகுதான் தெரிந்தது. சந்தியில ஒரு தண்ணி bowser  ஒண்டு எரிஞ்சு போய் இருந்தது .  கடை கட்டடம் ஒன்று வெடி வைத்து தகர்க்க பட்டிருந்தது.  நான் விழுந்து கிடந்த இடத்திற்கு பக்கத்திலிருந்த தபால் கந்தோர் அடியில், சண்டைக்கு நடுவில மாட்டுபட்டு ஒரு ஆள் இறந்து போயிருந்தான். 

3 comments:

எஸ் சக்திவேல் said...
This comment has been removed by the author.
எஸ் சக்திவேல் said...

1986 என்று நினைக்கிறேன். உண்மையிலேயே இது சகோதர யுத்தம்தான். அண்ணன் ரெலோவில் இருக்க, தம்பி புலியில்... இந்தச் சோகங்களின் விளைவு முள்ளிவாய்க்கால் வரை, ஏன் அதுக்குப் பிறகு வரை தொடர்கிறது. "மொக்குச் சிங்களவன்" என்று சொல்லிச் சொல்லி முட்டாளானானது யாரென்று நான் சொல்லத்தேவையில்லை.

Anonymous said...

>அது சரிவரேல்ல எண்டால், டியூஷனுக்காவது டவுனுக்கு போய் வர வேணும்.

அப்பதானே போறவாற பெட்டைகளைப் பார்க்கலாம். என்ன சொன்னாலும் அந்த வயதில் பார்த்த பெட்டையள் மாதிரி வடிவான பெட்டைகளை இப்ப காணமுடியாது. (பெட்டைகளும் இதைத்தான் சொல்லுவாளவை, "அப்ப நாங்கள் (பார்வையால்) எறிந்த பெடியள் மாதிரி இப்ப cute ஆன பெடியள் இப்ப இல்லை எண்டு); ம்ம்ம்ம் எல்லாம் வெலாவ.