Wednesday, October 12, 2011

ஒரு அகதியின் டயரி - 5 - பிள்ளபுடி காலம்


சின்ன வயதில, மெயின் ரோட்டுக்கு போகாத, பிள்ளைபிடிகாரன் பிடிச்சுக்கொண்டு போயிருவான். கொண்டுபோய் கருவாடு காய விடுறஇடத்தில காகம் குருவி கலைக்க விட்டிருவான் எண்டு பயமுறுத்துவினம். அப்ப நான் ஒரு பிள்ளை பிடிகாரனையும் காணேல்ல.  ஆனா நாங்க  படிக்கேக்க உண்மையாவே பிள்ளை பிடிகாரர் ஊருக்க உலாவ தொடங்கிரான்கள். ஊருக்க வானில ஏழு எட்டு பேரா வருவாங்கள். கண்ணிலபடுற பெடியளை துப்பாக்கி முனையில பிடிச்சுக்கொண்டு போயிருவங்கள். மாட்டுபட்டா   அவளவுதான்.  training  எண்ட பெயரில நாலு தரம் ஓட விட்டிட்டு, கொண்டுபோய் சண்டைக்கு நடுவில விட்டிருவங்கள். அமைதி படையின் ஆசிர்வாதத்தோட பிள்ளை பிடி நல்லாவே நடந்தது.  விருப்பம் இல்லாம துப்பாக்கி தூக்குறது எண்டது கொடுமையான விஷயம். ஏன் சண்டை பிடிக்கிறம், எதுக்கு பிடிக்கிறம் எண்டு தெரியாம, சுடவும் மனம் இல்லாம சண்டைக்கு  நடுவில நிண்டு சாகவேண்டியதுதான்.
       ஒருக்கா நான் யாழ்ப்பாணம் டியூஷனுக்கு போகேக்க பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். கொண்டு போய் யாழ்ப்பாணம் central college ground இல பொழுதுபடும் மட்டும் இருத்தி வைத்திருந்தாங்கள். ஏதோ என்ர நல்ல காலம் அண்டைக்கு ஒருமாதிரி  தப்பி வந்திரன். அதுக்கு பிறகு எங்கட அட்டகாசம் எல்லாம் ஊரோட அடங்கி போச்சு. ஒருக்கா சந்திக்கு கடைக்கு போகேக்க அங்க வைச்சும் பிடிச்சிற்றான்கள். ஆனா அம்மாவும் சந்தியில நிண்ட  வேற கொஞ்ச பேரும் குழம்பின படியால என்னை இறக்கி விட்டிற்று போயிறான்கள். அதுக்கு பிறகு எங்களுக்கு வீட்டில house arrest போட்டாச்சு.  ஊரெல்லாம் ஒருவித டென்ஷன். ஊருக்க கன பெடியள் பிடிபட்டு போனாங்கள். எப்ப யாரு பிடிபடுவன்களோ எண்டு ஒரு பயம். ஆனா எனக்கு வீட்டுக்க இருந்திருந்து போர் அடிச்சு போய், அம்மாவுக்கு தெரியாம பின் ஒழுங்கையால Cricket, Volleyball எண்டு திரிய, அம்மா இவனை இங்சை வைத்திருந்தால் கரைச்சல் எப்பிடியாவது கொழும்புக்கு அனுப்ப வேணும் எண்டு தீர்மானிச்சா.

ஆனா கொழும்புக்கு போறது ஒண்டும் லேசான வேலையில்லை. வங்களாவடி சந்தியில தொடங்கி யாழ்ப்பணம், ஆனையிறவு, கிளிநொச்சி, மாங்குளம் , வவுனியா எண்டு வழி  நெடுக பிள்ளை பிடி முகாம்கள் இருக்கு. இவ்வளவு முகாமையும் தாண்டி, risk   எடுத்து போறதுக்கு பயமா இருந்தாலும் வீட்டுக்க அடைபட்டு இருக்கேலாம நானும் ஓம் எண்டுட்டன். பஸ்சில பாதுகாப்பா போக ஏலாது. வேற என்ன செய்யலாம் எண்டு யோசிக்கேக, பக்கத்து வீட்டு குகன் அண்ணா, நீ பயப்பிடாம என்னோட லொரியில வாடா. நான் கூட்டிக்கொண்டு போய் காலியில விடிறன் எண்டு சொல்ல நானும் OK எண்டு வெளிக்கிட்டிடன்.

    அம்மன் கோவில்ல ஒருக்கா வடிவா விழுந்து கும்பிட்டு, லொரியில ஏறியாச்சு. லொறி முழுக்க புகையிலை சிற்பம். ஆனா தேவைப்பட்டா எண்டு டிரைவர் seat  க்கு பின்னால இருக்கிற கதவால உள்ழுக்க போய் ஒளிக்க ஒரு சின்ன இடைவெளி விட்டுதான் சிற்பம் அடுக்க பட்டிருந்தது. வங்களாவடி சந்திக்கு போகம, லொறியை வடக்கு ரோடால நேர யாழ்ப்பாணத்துக்கு விட்டு முதல் barrierஐ ஈசியா தாண்டியாச்சு. ஆனா ரெண்டாவது barrier பண்ணை பாலத்தடியில லொறியை மறிச்சு  இறக்கி போட்டாங்கள்.  கொழுப்புக்கு புகையிலை கொண்டு போறன் அது இது எண்டு சொல்ல, ஒரு நமட்டு சிரிப்போட சரி போ எண்டு விட்டுட்டாங்கள். எப்படியும் போற வழியில மாட்டுவார் எண்ட நம்பிக்கை போல.
  எங்கட நல்ல காலத்துக்கு நல்ல அடைமழை பெய்ய தொடங்கிற்று. மழையால கிளிநொச்சி , மாங்குளம் barrier  ஐ இறங்காமலே தாண்டியாச்சு. இன்னும் வவுனியா மட்டும் தான் எண்டு கொஞ்சம் நிம்மதியா போகேக்க வந்தது  வினை.


லொறி மாங்குளம் தாண்டி போய்க்கொண்டு இருந்தது. ரெண்டு பக்கமும் அடர்ந்த காடு. அது அடிக்கடி சண்டை நடக்கிற ஏரியா வேற.  இருந்தாப்போல காட்டுக்க இருந்து கொஞ்ச கூர்க்கா இந்தியன் ஆமிக்காரர் ரோட்டுக்கு வந்தாங்கள். வந்து லொறியை மறிச்சு  காட்டுக்க திருப்பி எங்கள் எல்லாரையும் இறக்கி பின் பக்கம் பார்க்க இருத்தி வத்திருந்தான்கள். பின்னால துப்பாக்கியோட ஆமிக்காரர். நான் அதுதான் என்ர கடைசி நாள் எண்டு நினைச்சன். காட்டுக்க இருந்த படியால பின்னால ரோட்டில என்ன நடக்கிறது எண்டு ஒண்டும் தெரியேல்ல.  ஆனா தொடர்ந்து வாகனங்கள் போற சத்தம் மட்டும் கேட்டுது. ஒரு நாலு ஐந்து மணித்தியாலம் அப்பிடியே இருந்திருப்பம், அதுக்கு பிறகு வாகன சத்தம் குறைஞ்சிது . ஆமிக்காரரும் எங்களை போக சொல்லிற்று தங்கட truck  இல ஏறி போயிற்றாங்கள். அப்பத்தான் போன உயிர் திரும்பி வந்தமாதிரி இருந்தது. பிறகுதான் கேள்விபட்டம் ஒரு பெரிய இராணுவ தொடரணி வவுனியாவில இருந்து யாழ்ப்பாணம் போறதுக்குதான் ஆமிக்காரர் guard பண்ணிக்கொண்டு நின்டிருக்கிறாங்கள் எண்டு. அதுக்குள்ளே human shield மாதிரி நடுவில நாங்கள். எங்கட நல்ல காலத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லாத படியால போக விட்டிட்டாங்கள்.

     வவுனியா தாண்டிக்குளம் barrier  இல லொறிக்கு எண்டு தனி க்யூ. லொறிஐ  பதிய போகேக்க நானும் சேர்ந்து போய் பிள்ளை பிடி காரர் பக்கம் போகாமல் மற்ற பக்கத்தால போய் லொறியில  ஏறிற்றன்.   கடைசி barrier  உம் தாண்டியாச்சு. ஆனா கன நேரம் காட்டுக்க நிண்டதால இரவு சாப்பாட்டுக்கு வவுனியவில நிக்க வேண்டியதா போச்சு. இரவு சாப்பாடு சாப்பிட்டு வெளியில வாறன், வெள்ளை வான் ஒண்டு  பக்கத்தில வந்து என்னை இழுத்து உள்ளுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். ஊரில பிடிபட்டாலும் ஒண்டு ரெண்டு தெரிஞ்ச பெடியளாவது இருந்திருப்பான்கள். இஞ்ச வந்து இப்பிடி தனிய மட்டு பட்டுட்டன் . ஆனா குகன் அண்ணா விடயில்லை. பின்னால லொறியில தொடர்ந்து வந்து அவங்கட முகாமில, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா எல்லா இடமும் கதைச்சு  பதிஞ்சுதான் வாறம். அது இது என்னது சொல்லி ஒருமாதிரி வெளியால கொண்டு வந்திர்றார்.  அண்டைக்கு காலிக்கு போனவன்தான் இந்தியன் ஆமி ஊரை விட்டு போகுமட்டும் ஊர் பக்கம் போகவே இல்லை.
  இண்டைக்கு குகன் அண்ணா எங்களோட இல்லை . ஆனா அண்டைக்கு செய்த உதவியை உயிர் உள்ளவரை மறக்க ஏலாது..

2 comments:

ravies said...

இந்திய ஆக்கிரமிப்புப் படைக்காலம் என்பது யாராலும் மறந்து விட முடியாது.நானும் இப்படித்தான்
கொழும்புக்கு ஓடிப்போய் பின்னர் அங்கேயும் அலுத்து விட திரும்பி வந்து யாழில் ஈ.என்.டி.எல்.எவ்
இடம் மாட்டுப்பட்டு கிளிநொச்சியில் ஒரு வாரத்திற்கு மேல் இருந்தனான்.பின்னர் டெலோவில் இருந்த
எனது ஒன்று விட்ட அண்ணாவின் உதவியால் வெளிய வந்தனான்.ஆனாலும் ஊருக்குப் போக முடியவில்லை.
தீவக மக்களுக்கு வங்களாவடி மரணப்பொறியாகத்தான் விளங்கியது என்பதை யாரும் மறக்க முடியாது.
இன்றும் எம் மண் அப்படித்தான் இருக்கிறது.எம் அடிமை விலங்கொடிந்து சுதந்திர விடியல் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில் வாழும் தமிழ் மக்களில் நானும் ஒருவன்.

எஸ் சக்திவேல் said...

நானும் ஒருக்கா கொழும்பு "தப்பிப்"போக முயற்சிக்க கிளிநொச்சிக்குக் கிட்டவைத்து பிடிபட்டு ஒரு 'காம்ப்'இல் ஒருநாள் இருந்தேன்.